சிறப்புக் கட்டுரை: சொல்லகம் என்னும் புதுவரவு! - பரிபூரணி

graphic clubhouse செயலியின் முகப்புப் படம்

       நாட்கள் நகர நகர தொழில்நுட்பத்தின் பரிணாமம் பலவாறு உருவாகியும், உருமாறியும் வருகிறது. இருக்குமிடத்தில் இருந்து கொண்டே, உலக மக்களிடையே ஒரு பிணைப்பை, முன்னர் அறியாதவர்களோடு ஒரு இணைப்பை, சமூக ஒன்றிணைப்பை உருவாக்குவதிலும், தனது இருப்பை இப்பாருக்கு பறைசாற்றவும்    முதலும் முக்கியத்துவமும்  வாய்ந்த தொழில்நுட்பமாக திகழ்வது சமூக ஊடகங்கள்.  

      முகநூல் (facebook) , கீச்சகம் (twitter), அளாவி (messenger), புலனம் (whatsap), படவரி (instagram), பற்றியம் (webchat), தொலைவரி (telegram) என்ற சமூக ஊடகங்களின் வரிசையில் சில காலங்களாய் பெருவாரி மக்களைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது சொல்லகம் எணப்படும் கிளப் ஹவுஸ் (Clubhouse) செயலி

      ஹைலைட் என்னும் செயலியை வடிவமைத்த பால் டேவிசன் அவர்களும், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளரும் இந்திய அமெரிக்கருமான ரோஹன் சேத் அவர்களும் இணைந்து 2019-ஆம் ஆண்டு இச்செயலியை உருவாக்கி,  முதலில் டாக்க்ஷோ  என பெயரிட்டு, பின்னர் கிளப்  ஹவுஸ் என மாற்றம் செய்துள்ளனர்.

      2020 மார்ச்சில் பயன்பாட்டுக்கு வந்த இச்செயலி ஒன்றரை ஆண்டுக்குள் உலகம் முழுவதும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைப் பெற்றுவிட்டது. சில வாரங்களாகத் தமிழ் சமூக ஊடகவெளியில் கிளப் ஹவுஸ் குறித்த பதிவுகளும் விவாதங்களுமே ஆக்கிரமித்தன.

      பகிரப்பட்ட செய்திக்கான லைக்குகள்,  கமெண்டுகள் போன்றவற்றுக்காக காத்திராமல், குரல்வழி உரையாடலின் மூலமாகவே உடனுக்குடன் பிறரது கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்டதே இச்செயலி.

      முதலீட்டு ஆலோசனை, அரசியல் கருத்துகள், அறிவுசார் தகவல்கள், புத்தகங்கள், தொழில்நுட்பம் இலக்கியம் போன்றவைக் குறித்த விவாதங்கள் தொடர்புடைய துறை வல்லுநர்கள் மற்றும் பிரபலங்களின் பங்கேற்புடன் ஒருபுறம் நடைபெற, இசை, சினிமா, பாலியல் மற்றும்  இதர பொழுதுபோக்கு அரட்டைகளுக்கும் கொஞ்சமும்  பஞ்சமில்லை.

      சில நாட்களுக்கு முன்புவரை திறன்பேசியில்   கிளப் ஹவுஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்பவர் ஏற்கெனவே அந்தச் செயலியைப் பயன்படுத்துபவரிடமிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே தனது கிளப் ஹவுஸ் கணக்குக்குள் நுழையமுடியும் என்றிருந்தது. இம்முறை தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது. நமக்கான கணக்குக்குள் நுழைந்தவுடன் செயல்பாட்டில் இருக்கும் அறைகளில் பங்கேற்கலாம், நாமே திறந்த அறை, சமூக அறை, தனி அறை  என்ற ஏதேனும் அறைகளை உருவாக்கவும் முடியும். பயனர் தனது புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்துக்கொள்ளலாம் என்பதைத் தவிர முழுக்க முழுக்க குரல்வழி உரையாடலுக்கு மட்டுமேயான செயலிதான் இந்த கிளப் ஹவுஸ்.

      இதில் அறைகளைத் தொடங்குபவருக்கு நெறியாளர் (Moderator) என்று பெயர். அந்த நெறியாளர்  அறைக்குள் யாரெல்லாம் நுழையலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்; கட்டுப்படுத்தலாம்,  பேச்சாளர்களையும் அவரே முடிவுசெய்யலாம், பங்கேற்பாளரை நெறியாளராகவும் மாற்றலாம்.  கேட்டுக்கொண்டிருப்பவர் பேச விரும்பினால் கையை உயர்த்திக்காட்டும் குறியீடு மூலம் தன் விருப்பத்தை நெறியாளருக்குத்  தெரிவித்ததும் அவரைப் பேச்சாளராக அழைக்கலாம். பயனாளர் தான்  தற்பொழுது இருக்கும் அறைக்குப் பிற பயனாளர்களைப் பின் (pin)  செய்து அழைக்கவும் இயலும்.     

      ஓர் அறையில் 5,000 பேர் வரை பங்கேற்கலாம் என்கிற விதி தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது. ஓர் அறைக்கான காலவரையறை என்றெல்லாம் ஏதுமில்லை. பயனாளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பவும் இயலும். திறன்பேசியில் பயன்படுத்தும்போது இச்செயலியில் பதிவு செய்வதற்கான வசதிகள் இதுவரை ஏதுமில்லை. எனவே நிகழ் நேரத்தில் மட்டுமே இந்த உரையாடலைக் கேட்க முடியும். தவிர திறன்பேசியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள பதிவுசெய்யும் இதர செயலிகளைக் கொண்டு வேண்டுமானால் பதிவுசெய்துக்கொள்ளலாம்.

      இச்செயலியை கிளப் டெக் (Clubdeck) என்னும் மென்பொருள் மூலம் கணினியிலும் பயன்படுத்தலாம். தொலைபேசி  எண்ணையும், அவ்வெண்ணிற்கு பெறப்படும் ஒருமுறை சரிபார்ப்பு குறி (One Time Password)  கொண்டும் ஏற்கனவே  பயன்படுத்தும்  அதே பயனர்  விவரங்களுடன் கணினியிலும் பயன்படுத்தமுடியும். ஆனால், திறன்பேசியிலிருக்கும் கிளப் ஹவுஸ் செயலி கணக்கிலிருந்து வெளியேறிவிடும். கிளப் டெக்கில்  நெறியாளர்  பங்கேற்பாளர்களை மொத்தமாக mute  செய்வது, நிகழ் அறையின் உரையாடலைப் பதிவு செய்வது உள்ளிட்ட வசதிகள்  கூடுதலாக இடம்பெற்றிருக்கும்.

      அகத்தின் உணர்வு முகத்தில் அறிய இயலுமென்பார்கள். உடன் உரையாடுபவரின் முகபாவனை, கண்ணசைவு இவைகளைப் பாராது உரையாடுவது நிறைவை அளிக்காது, உரையாட இயலாது என்றெண்ணும் பொதுச் சமூகமே இத்தகைய ஒலிவழிச் சமூக ஊடகத்தைப் பெருவாரியாக பயன்படுத்துகிறது.

      இச்செயலி முற்றிலும் ஒலிவடிவிலான ஊடகம்  என்பதாலும், மேற்படி அம்சங்களைக் கொண்டதாலும், பார்வையற்றவர்கள் பயன்படுத்துவதற்கேற்ப  அணுகல் தன்மையுடையதாய் உள்ளதாலும், தற்பொழுது ட்ரெண்டாகிவரும் ட்விட்டரால் உருவாக்கப்பட்ட ஸ்பேசஸ் என்னும் செயலியைவிட கிளப் ஹவுஸ் செயலி பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே பரந்த பயன்பாட்டைப் பெற்றுவருகிறது. மின்மடல் குழுமங்கள், புலனக்குழுக்கள், தொலைவரி குழுக்கள், ஜூம் அரங்குகள்  போன்ற வழிகளில் ஒன்றிணைந்த பார்வையற்றவர்கள் தற்பொழுது கிளப் ஹவுஸ் மூலமாகத் தங்களது உறவை, உணர்வை, எண்ணங்களை, இருப்பைப்  பதிவுசெய்துக்கொள்கின்றனர்.

      சென்ற ஆண்டு  கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொதுமுடக்கக் காலங்களில் பலவிதத் தலைப்புகளின்கீழ்  ஜூம் அரங்குகளில் உலாவிய பார்வையற்றவர்கள் தற்பொழுது கிளப் ஹவுஸ் அரங்குகளில் இசை, தொழில்நுட்பம்,பார்வையற்றவர்களின்  எதார்த்த நிலை, எதிர்பார்ப்புகள், மேம்பாடு உள்ளிட்ட தலைப்பிலெல்லாம் உரையாடிவருகின்றனர். பிற கூடங்களில் நடைபெறும் பொது உரையாடல்களிலும் பங்கேற்று வருகிறார்கள்.

      இக்கிளப் ஹவுஸ் செயலியைப் பெரும்பாலும்  பயன்படுத்தும் பார்வையற்றவர்கள் சிலரிடம் விரல்மொழியர் சார்பாக காணப்பட்ட பேட்டியின் சில அம்சங்கள் மட்டும் வாசிப்பாளர்களுக்காக.

graphic திரு. கண்ணன் அவர்களின் படம்
திரு. கண்ணன்

       பாண்டிச்சேரியில் வசித்துவரும் திரு. கண்ணன் அவர்கள் இசைப்பலகை (keyboard) இயக்குவதில் வல்லுநர். மே மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கௌரேசன் ரத்தினராஜா என்னும் பார்வையற்றவர் அனுப்பிய அழைப்பைக்கொண்டு இச்செயலியில்  இணைந்துள்ளார். அந்த நாட்களில் தமிழ்நாடுவாழ் பார்வையற்றவர்கள் அதிகம் இச்செயலியைப் பயன்படுத்தவில்லை. பிற நாடுகளைச் சார்ந்த பார்வையற்றவர்கள் அனைவரும் தனது  சுய குறிப்பில் தான் ஒரு பார்வையற்றவர், பதிவுசெய்யப்பட்ட பார்வையற்றவர் உள்ளிட்ட வகையில் தனது ஊனத்தைக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டபோது அவருக்கு மிகுந்த வியப்பை அளித்ததாம். நடைபெறும் அறைகளுக்குச் சென்று உரையாற்றுவது, இசை தொடர்புடைய அறைகளுக்குச் சென்று இசைப்பலகை வாசித்துக் காண்பிப்பது  என்று தொடங்கியதே அவரது கிளப் ஹவுஸ் பயணம். “இச்செயலியைக் கணினியில் பயன்படுத்தத் தொடங்கியதே மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் தரமான ஒலியில் இசைப்பலகை வாசித்துக்காட்ட இயன்றதுஎன்கிறார். இதனால் அதிகரித்த பின்பற்றாளர்களுக்கு (followers) நிறைவை அளிக்கவேண்டுமென்பதற்காக, எவ்வறைக்குச் சென்றாலும்  பாடல்கள் வாசித்துக்காண்பிப்பார். வார இறுதி நாட்களில் இசை வாத்திய பயிற்சி நடத்தியதில் இருநூறு  பேர் பங்கேற்றனர். அமெரிக்க ஐக்கிய  நாடுகளில் நான்காம் வகுப்பு பயிலும்போதே ஏதேனும் இசைக் கருவி இயக்கக் கற்றுக்கொள்ளுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், சிலர் இவரை அணுகி இணையவழி பயிற்சி வழங்கக் கோரியதைத் தொடர்ந்து, இணையவழி இசைக்கருவி இயக்கும் பயிற்சி வழங்கிவருகிறார்.

            கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தனியார்துறை பணியிலிருந்து நீக்கப்பட்டு, பிறிதொரு பணியினைத் தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு  இப்பயிற்சி வகுப்பிலிருந்து பெரும் சொற்ப ஊதியம்மிக பயனுள்ளதாய் உள்ளது என்கிறார். இசை ஆர்வலர்களுக்காக மியூசிக் ஹன்டர்ஸ் என்னும் கூடத்தையும், பொழுதுபோக்கு அரட்டைகளுக்காக நமக்கு மட்டும் என்னும் கூடத்தையும் தொடங்கியுள்ளார்.

      அமெரிக்க ஐக்கியநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணைந்து நடத்தும் டி கடை பெஞ்ச் என்னும் அறையில் பங்கேற்று தனது கருத்துகளைப் பகிர்வார். அப்போது S.V. சேகர் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இசைப்புயல் .ஆர். ரகுமானுடன் பாடும் கர்நாடக இசைப் பாடகர் பாலக்காடு ஸ்ரீராம், ரேடியோ மிர்ச்சியின் நிறுவனர்களில் ஒருவரான நப்ருன்ஹோஷ், இந்தியாவின் லீடிங் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன், ராஜேஷ் வைத்தியநாதன், பாடகர் சைந்தவி அவர்களுடனான தொடர்பு கிடைத்துள்ளது. உன்னிகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தில் அவருடன் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.  சிறப்பாக இசைக்கருவி இயக்கியதாக பாடகர் சின்மயி அவர்களிடமிருந்து  பாராட்டு பெற்றுள்ளார்.

graphic பார்வையற்றவன் அவர்களின் படம்
பார்வையற்றவன்

       சமூக ஊடகங்களில் பார்வையற்றவன்என்னும் புனைபெயரில் எழுதிவரும் விரல்மொழியர் இணையாசிரியர் பொன். சக்திவேல்   அவர்கள்  அதே பெயரில் கிளப்ஹவுஸிலும் வலம்வருகிறார். புயல் என்னும் கூடம் மாதம் ஒரு பிரிவினரை மையமாகக் கொண்டு கருத்துப் பகிர்வு மற்றும் விவாத நிகழ்வு நடத்துவார்கள். ஜூன் மாதம் பால்புதுமையினர் குறித்தும், ஜூலை மாதம் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் நடத்தினர். இதில் ஜூலை மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கூடத்திற்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். ழகரம் என்னும் கூடத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த தினத்தில்  உரை நிகழ்த்தியுள்ளார்.

      அறிவுசார் விடயங்களை விவாதிக்கும் அறைகளுக்குச் சென்றால், பார்வையற்றவன் என்னும் பெயரைக் கண்டு பேச அழைக்கிறார்கள். அதேசமயம் முதிர்ச்சியில்லாத நபர்கள் உரையாடும் அறைகளில் அவ்வித அங்கீகாரம் கிடைப்பதில்லைஎன்கிறார் பார்வையற்றவன். தான் முகநூலில் தொடர்ந்து எழுதிவருவதால், அதில் பின்பற்றாளர்களாக இருப்பவர்கள் கிளப்ஹவுஸிலும்  தன்னைப் பின்பற்றுகிறார்கள்;  தானும் அவர்களைப் பின்பற்றுகிறேன் என்கிறார்.

      தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களான சாரு நிவேதிதா,  சங்கர ராமசுப்ரமண்யன், ஷார்லின் மரியா லாரன்ஸ், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆனந்த், ரவிசங்கர் ஐயாக்கண்ணு  ஆகியோரைப் இவர் பின்பற்றிவருகிறார். நவீன கோணங்கி என்னும் கூடத்தை நிறுவி அவ்வப்போது பார்வையற்றவர்கள் தொடர்புடைய விவாதங்கயுளையும் முன்னெடுத்துவருகிறார்.

graphic சௌண்டப்பன்அவர்களின் படம்
சௌண்டப்பன்

      சேலத்தைச் சேர்ந்த  சௌண்டப்பன் என்பவர் பார்வையுள்ளவர்களாலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் நடத்தப்பெறும் வினாடி வினா  கூடங்களிலும், கதைகளை வாசித்து அது குறித்து ஆழமான விவாதங்களை நிகழ்த்தி சிறந்த பின்னூட்டங்களுக்கு பரிசுகளை வழங்கிவரும் சிறுகதை நேரம் என்னும் கூடங்களிலும் பங்கேற்றுவருகிறார். 

      Virtual DJ என்னும் மென்பொருளைப் பயன்படுத்திப் பார்வையற்றவர்கள் டிஜே செய்வது எப்படி என்பதை  விளக்கிவரும்  Blind DJs’  கூடம் வாரந்தோறும் வியாழன் மாலை பல நாடுகளில் வாழும் பார்வையற்றவர்களை இணைத்து அம்மென்பொருள் குறித்த ஐயங்களைத் தெளிவுபடுத்திவருகிறது. மலையாளத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு வகுப்புகளை நடத்திவரும் கூடங்களிலும், எழுத்தாளர்களை அழைத்து வாசகர்களுடன் உரையாடல் நிகழ்த்திவரும் ஸீரோ டிகிரி பப்ப்ளிஷர்ஸ் என்னும் கூடத்திலும்  பங்கேற்றுப் பயன்பெற்றுவருகிறார்.

      சமூக ஊடகங்களில் பயணிக்கும் பிரபலன்களுடனான நேரடித் தொடர்பு கிடைத்துவருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறார் அவர்.

graphic பெருமாள் அவர்களின் படம்
பெருமாள்

       குரலால் இணையும் இச்செயலியில் குழலால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களைப் பெற்றுள்ளார் பெருமாள் என்னும் பார்வையற்றவர். இவர் மீட்டும் இதமான குழலோசையில் மயங்கி மக்கள் பலர் பாராட்டு மழை பொழியச்செய்வதோடு, தாமே முன்வந்து நிதிக்கொடை வழங்கியும் வருகின்றனர்.

graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்

       பார்வையற்றவர்களால் முதன்முதலில் தொடங்கப்பட்ட முதல் சொல்லக கூடமான விரல்மொழியர் இதுவரை வானொலி நினைவலைகள், பார்வையற்றோரின்  கழிப்பறைச் சிக்கல்கள், திரைப்படங்களில் ஒலிவிவரணைகள், பார்வையற்ற யூட்டுபர்ஸ் உடனான உரையாடல் உள்ளிட்ட அரங்குகளை நிகழ்த்தியுள்ளது. இதில் பார்வையற்றவர்களும்,  பார்வையுள்ளவர்களும் கலந்துகொண்டு தனது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

graphic சவால் முரசு  மின்னிதழின் சின்னம்

       பார்வையற்றவர்களுக்கான தமிழில் முதல் செய்தி ஊடகமான சவால்முரசு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பண மேலாண்மை சுதந்திரம் என்னும் தலைப்பில் கூடுகையை நிகழ்த்தியுள்ளது.

       நவீன கோணங்கி என்னும் கூடம் பார்வையற்றோர் தொடர்புடைய பல கூடுகையை  நிகழ்த்தி 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவைகளுள் பார்வையற்றோருக்கும் பொருந்தும் திரையிசைப் பாடல் வரிகள், பார்வையற்றோர் கவிதைகள், கிளப்ஹவுஸ் அப்டேட் குறித்த விளக்கம், முதல் தட்டச்சு அனுபவம், அதிகம் கவர்ந்த விளம்பரங்கள் போன்ற கூடுகைகள் குறிப்பிடத்தக்கதாகும்.

       இலக்கியம் குறித்து உரையாடும் புலிக்குட்டி பாண்டியன் என்பவரது தமிழமுதம், திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்களால் நடத்தப்படும் சமுதாயமே திரும்பிப் பார், அரசியலை முதன்மையாக கொண்டு விவாதிடும் தெரிந்துகொள்வோம், திறமைகளுக்கு மேடை அமைத்துத் தரும் கலைக்கூடல், தொழில்நுட்பம் குறித்து உரையாடும் கே.கே. டெக், டெக்னோசென்டர் ஆகியவற்றோடு ஒளிரும் பனித்துளி, ஆர். ஜெ.தமிழா, தமிழ் உலகம் முதலியவை பார்வையற்றவர்களால் நடத்தப்படும் சொல்லக கூடங்களாகும்.

      பார்வையுள்ளவர்களால் நடத்தப்பெறும் இசை கூடங்களிலும் இலக்கிய கூடங்களிலும் அவ்வப்பொழுது பார்வையற்றவர்கள் பங்கேற்றுவருகின்றனர். அதிலும் குறிப்பிடத்தக்கவாறு பேசுவோமா என்னும் கூடத்தில் நாள்தோறும் நடைபெறும் போறபோக்குல ஒரு கவிதை என்னும் அரங்கிலும், திருக்குறள் பகிர்வோம், கதைக்களம் ஆகிய அரங்குகளில் பார்வையற்றவர்கள் பரவலாகக் கலந்துகொள்கின்றனர்.

graphic திரு. வ்யாகுள் அவர்களின் படம்
திரு. வ்யாகுள்

       கத்தாரில் வசித்துவரும் திரு. வ்யாகுள் மற்றும் திரு. நிர்மல்  ஆகிய பார்வையுள்ளோர் பார்வையற்றவர்களுடன் இணைந்து   பல உரையாடல்களிலும் பங்கேற்றுவருகின்றனர். “பார்வை மாற்றுத்திறனாளிகளுடனான அனுபவம் புதுமையானதாக இருப்பதாகவும், அது தனது கல்லூரிக் காலத்து மகிழ்ச்சிப் பெருக்கை மீட்டுக்கொண்டு வந்திருப்பதாகவும் கூறுகிறார் வியாகுல்.ஊனம் யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற ஒரு சிந்தனை என்னைப் பார்வையற்றோர் பக்கமாகக் கிலப்ஹவுஸில் திருப்பியது. உங்களைக் கண்டும் காணாமலும் பொதுச் சமூகம் பல நேரங்களில் ஒதுங்கிக்கொள்கிறது.  மக்கள் இன்னும் நிறைய உங்களை உற்றுநோக்கவேண்டியுள்ளது. உங்களை அங்கீகரிக்க வேண்டியுள்ளதுஎன்கிறார் வியாகுல்.

graphic நிர்மல் அவர்களின் படம்
நிர்மல்

       மற்றவர்கள் கிலப் ஹவுஸைத் தங்களுக்கான மேடையாக நினைக்கின்றனர். நீங்கள் இதனை உங்கள் வீடாகவே கருதுகிறீர்கள் இரயில் பயணத்தில் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியாக பேசிக்கொள்வதைப் போல எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் இயல்பாக பேசிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கென தனித்திறன் உடையவர்களாகவும், வாசிப்புப் பழக்கம் உடையவர்களாகவும் இருப்பது எனக்கு மிகவும் வியப்பை அளிக்கிறது. அதோடு மற்றக் அரங்குகளில் ட்ரெண்டிங் என்று சொல்லக்கூடிய அன்றாடம் வரக்கூடிய செய்திகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் போது இவர்கள் பல விடயங்கள் குறித்து ஆழமாக ஆராய்வதும், மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பு அளித்து மகிழ்வதும் புதுமையாக உள்ளது.” என்று தனது கருத்தைத் தெரிவிக்கிறார் எழுத்தாளர் நிர்மல்.

      தனிநபர் சுதந்திரம், தரவுத் திருட்டு உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் அரங்கேறினாலும், காலை கண்விழித்தது முதல் கண்ணயரும் வரை கிளப்ஹவுசே  கதியென கிடப்பவர்களும் உண்டு.

        பாலினம் பாராது, அகவை அகற்றி, தொலைத்த நட்பைத் தேடிப்பெற்று, உறவில் திளைத்து, உபயோகமாய் உரையாடி, உறவாடி வரும் பார்வையற்றவர்கள் இன்னும் பொதுச் சமுகத்தோடு ஒன்றிணைந்து அதிகம் உரையாடித் தனது இருப்பை, இயல்பைப் பதிவுசெய்யவேண்டும்.  இவ்வகையான சமூக ஊடகங்களில் இன்னும்  பெருவாரியான பார்வையற்றவர்கள் பங்கேற்கவேண்டும்.

 

இச்செயலியைத் திறன்பேசியில் நிறுவ   https://play.google.com/store/apps/details?id=com.clubhouse.app&hl=en_US&gl=US


கணினியில் நிறுவ https://www.clubtec.com/

 தொடர்புக்கு: paripoorani2410@gmail.com

6 கருத்துகள்:

  1. பரிபுரணிக்கு எழுத்து களை பரிபூரணமாக கைகூடி விட்டது. சிறப்பான மொழி நடை, சிறப்பான சொள் பயன்பாடு. நாளுக்கு நாள் எழுத்துக்களில் முன்னேற்றம். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மிகச் சிறப்பான எழுத்துநடை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு செயல்பாடுகளையும் மிக கவனமாக உற்று நோக்கி அவர்களைப் பற்றி எழுத முனைந்து இருக்கின்ற இந்த சிறப்பான முயற்சி தொடரட்டும் மிகவும் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு