2020-ஆம் ஆண்டிற்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தற்போதுதான் நடந்துமுடிந்திருக்கின்றன. இதில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்களம் என 7 பதக்கங்களைப் பெற்றிருக்கிறது. பதக்கம் பெற்ற அனைவருக்கும் விரல்மொழியரின் வணக்கங்கள்.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து கோடைக்கால பாராலிம்பிக் போட்டிகள் நடந்துமுடிந்திருக்கின்றன. இதில் எப்போதும் இல்லாத அளவில் இந்தியாவிலிருந்து 54 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அணிவகுப்பில் தலைமை\யேற்கும் தகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று. (பின்னர் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதன் காரனமாக அணிவகுப்பில் தலைமை\யேற்கும் வாய்ப்பு வேறொருவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)
அதோடு, இதுவரை இல்லாத அளவில் 19 பதக்கங்களைப் பெற்று அசத்தியிருக்கிறார்கள் நமது இந்திய வீரர்கள். இதில் 5 தங்கம்; 8 வெள்ளி; 6 வெண்களம். வெற்றி பெற்ற அனைவரையும் பெருமிதத்தோடு வணங்குகிறது விரல்மொழியர்.
வெற்றி பெற்றவர்களையும், பங்குபெற்றவர்களையும் வாழ்த்தும் அதே வேளையில், முக்கியமான ஒரு பொருள் குறித்து பேசவேண்டியுள்ளது.பாராலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்தியப் போட்டியாளர்களில் 40 பேர் ஆண்கள். 14 பேர் பெண்கள். இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் தெரியுமா? ஒரே ஒருவர்தான். சிம்ரன் சர்மா என்ற பெண். அவருக்கு விரல்மொழியரின் வாழ்த்துகள்.
போட்டியில் கலந்துகொள்ளும் பெரும்பாலானோர் கை அல்லது கால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்தப் பெரிய வாய்ப்பில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மிகக் குறைவாக பங்கேற்பதற்கான காரணம் என்ன? நாம் மிகத் தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய கேள்வி இது.
ஒரே ஒருவர் பங்கேற்கும் அளவிற்கு மற்ற மாற்றுத்திறனாளிகளைக் காட்டிலும் நம்முடைய மக்கள் தொகை குறைவானதல்ல. மற்ற மாற்றுத்திறனாளிகளைப் போலவே விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களும் இங்கே அதிகம். அப்படி இருக்க, எப்படி இது நிகழ்ந்திருக்கும்?
நமக்கான அமைப்புகள் இது குறித்துத் தங்களைச் சுய பரிசீலனை செய்துகொள்வது அவசியம். பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் இருக்கும் விளையாட்டுத் திறன் மழுங்கடிக்கப்படுகிறதா? அல்லது கண்டுகொள்ளப்படுவதில்லையா? போதிய அளவு திறமைகள் இருந்தும் நம்மவர்களுக்கு முறையான பயிற்சிகள் கிடைப்பதில்லையா?
மற்ற மாற்றுத்திறனாளிகளால் நாம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறோமா? இறுதிக் கேள்வி கடுமையானதுதான் என்றாலும், கருத்தில் கொள்ளத் தக்கதே.
இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்கவேண்டும். பாராலிம்பிக் தகுதிப்படுத்தலுக்குப் போட்டியாளர்களைத் தயார்படுத்தும் பயிற்சியாளர்களுக்குப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்றுவிப்பது கடினமானதாகவும், மற்றவர்களுக்குப் பயிற்றுவிப்பது எளிதாகவும் இருக்கிறதா?
இன்னும் பல கேள்விகளைக் கேட்டு நமக்கான அமைப்புகள் விவாதிக்கவேண்டும். தடைகள் நம்மிடமிருந்தும் இருக்கலாம்; மற்றவர்களிடமிருந்தும் இருக்கலாம். ஆனால் தடையைத் தகர்க்கவேண்டியதும், அதனால் பலனடைய வேண்டியதும் நாம்தான்.
பாரிஸில் நடைபெற இருக்கும் அடுத்த பாராலிம்பிக்கிலாவது இந்தியாவிலிருந்து நிறைய பார்வை மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளவேண்டும் என ஒவ்வொரு பார்வைக் குறையுடையவரும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். நாடு முழுக்க ஆயிரக்கணக்கான பார்வைக் குறையுடைய இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் திறனை மேம்படுத்தி, அகத் தடைகளையும், புறத் தடைகளையும் கடந்து அவர்களை அடுத்த பாராலிம்பிக்கில் பங்கேற்க வைக்கவேண்டும்.
இத்தனை பெரிய மனித வளம் வீணடிக்கப்படுவது நமக்கு மட்டுமல்ல; நாட்டுக்கும் அவமானம் தான்.
இந்த விரல் மொழியர் மின்னிதழின் முப்பத்தி நான்காவது பகுதி மிகச் சிறப்பாக இருக்கிறது உண்மையிலேயே பார்வை மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள எப்படிப்பட்ட ஒரு முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும் அந்த முன்னெடுப்புகள் எடுப்பதில் நாம் தான் அக்கறை கொள்ள வேண்டும் என்ற ஒரு அருமையான கருத்தை நமக்குள்ளே விதைத்திருக்கிறார் இந்த கட்டுரை மிகச்சிறப்பு நன்றி
பதிலளிநீக்குஅதற்கான முக்கிய காரணம் மாற்றுத்திறனாளிகள் என்று பொதுமைப் படுத்தலும் சிறப்பு பள்ளிகள் நலிந்து வரும்
பதிலளிநீக்குquestion may be harsh, but need to advocate, give sum information about participation of blind in Paralympics.
பதிலளிநீக்குavailable games/sports blind in Paralympic
பதிலளிநீக்கு