அது 1947-இன் தொடக்கப்பகுதி. இந்தியாவிற்கு விடுதலை அளிக்கவிருப்பதாக அறிவிக்கிறது ஆங்கிலேய அரசு. நாடு முழுவதும் கொண்டாட்டமாக இருக்கிறது. வட இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தின் கருப்புப் பக்கங்களாய் நிலைத்துவிட்ட கலவரங்கள் மெல்ல மெல்லத் தொடங்கிய காலம். தென்னிந்தியாவில்தான் அந்தப் பிரச்சனை இல்லையே!
ஆனாலும் அவன் மட்டும் வருத்தமாய் இருக்கிறான். அவன் பெயர் பரிதி. தனது ஆங்கிலேயக் காதலியை எண்ணி எண்ணி மனம் உருகுகிறான்.
அவனது ஆங்கிலேயக் காதலி இந்தியாவிலேயே தங்கிவிடவேண்டுமென்று பெற்றோரை வற்புறுத்துகிறாள்; விடாப்பிடியாக மறுக்கிறார்கள் அவளது பெற்றோர். அவனைப் போல் அவளும் கண்ணீர் உகுக்கிறாள்.
வருகிறது ஒரு பாட்டு.
பாடல்: ஆருயிரே !
படம்: மதராசப் பட்டணம்
இசை: G.V. பிரகாஷ்குமார்
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: சோனர்நிகம், சைந்தவி.
சைந்தவியின் சோகமான குரலில் பாடல் தொடங்குகிறது. கல் நெஞ்சையும் கரைப்பதாய் இருக்கிறது G.V. பிரகாஷின் இசை. பல நல்ல திரைப்பாடல்களைத் தந்தவர் G.V. பிரகாஷ். அவர் தந்திருக்கும் முத்தான பாடல்களில் இதுவும் ஒன்று.
அது என்னவோ தெரி்யவில்லை, இந்தப் படத்தில் தமிழ்ப் பையனாக நடிக்கும் ஆர்யாவிற்குப் பின்னணி பாடியிருப்பவர்கள் உதித் நாராயனன், ரூப்குமார் ரதோர், சோனர்நிகம் ஆகிய தமிழ் தெரியாதவர்கள். எமிஜாக்ஸன் நடித்திருக்கும் ஆங்கிலேயப் பெண் பாத்திரத்திற்குப் பின்னணி பாடியிருப்பவர்கள் ஹரினி, சைந்தவி ஆகிய தமிழ் தெரிந்தவர்கள். ஆனாலும் பாடல்கள் மிகச் சிறப்பாய் உள்ளன.
நா. முத்துக்குமாரின் வரிகள் மிகச் சாதாரணமாகத்தான் இப்பாடலில் அமைந்துள்ளன. ஆனால் அவை நம்மை அசாதாரணமாக நம்மைப் பிடித்து உலுக்குகின்றன, கவிஞரின் மரணத்தைப் போல.
“நீ இல்லையேல் நான் இல்லையே! நீ போகும் முன்பே அன்பே நான் சாகிறேன்” என்று ஒரு வரி. எத்தனை எளிதான வரி இது? அவர்களின் பிணைப்பை இது நமக்கு ஆழமாக விளக்குகிறது என்பதை மறுக்கமுடியுமா?
எந்த ஒரு அலங்காரமும் இல்லாத ஒரு வரிதான் என்னை இப்பாடலில் மிகவும் ஈர்த்தது.
“கண்கள் மூடி அழுகிறேன்” என்ற வரிதான் அது. அது இன்னோர் இடத்தில் “உன்னை எண்ணி அழுகிறேன்” என்றும், “நம்மை எண்ணி அழுகிறேன்” என்றும் வரும். இதில் என்ன அலங்காரம் இருக்கிறது? அலங்காரமற்ற இந்த வரியில்தான் உண்மை இருக்கிறது. அதனால் அது நம்மை நெகிழவைக்கிறது.
இன்னோர் இடத்தில் “என்னைப் பிரிகிறேன்” என்பாள் அவள். இதைவிட ஒருத்தி தன் வலியை எப்படி விவரிக்கமுடியும்?
இதற்குப் பதிலாகவோ என்னவோ, அவன் சொல்வான் “உயிரைத் துறக்கிறேன்” என்று.
சைந்தவி பாடலை மென்மையாகப் பாடிக்கொண்டிருப்பார். சோனர்நிகம் நம்மையும் அழ வைக்கும்தொனியில் பாடிவிடுவார். “காற்றினில் வாரேனோ”, “நேற்றினில் வாழ்வேனோ”, “கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்” முதலிய இடங்கள் எல்லாம் கதறல் ரகம். மொழி தெரியாத சோனர்நிகம் இசையால் இப்படி ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார். இசை வலிமையானது.
நண்பர் ஒருவர் தன் காதலி இறந்த பிறகு இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே கதறியதும், அவருக்கு ஆறுதல் சொல்ல இயலாமல் நான் உறைந்து நின்றதும் என் நினைவில் நிலையாய் நின்றுவிட்ட நிகழ்வு.
நீங்களும் கேளுங்கள். முடிந்தால் தனிமையில் கேளுங்கள். உங்கள் கண்ணீருக்கு நான் உத்தரவாதம்.
பாடலை ரசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com
ஆசிரியரும் இழந்துபோன தன் காதலியை நினைத்துக்கொண்டே பதிவை எழுதியிருப்பார் போல. எழுத்துக்கள் வழக்கத்தைவீட கொஞ்சம் உதருகிறதே?
பதிலளிநீக்கு