சந்திப்பு: சதுரங்க விளையாட்டு வீரர் மாரிமுத்து – பாலகிருஷ்ணன் மருதமுத்து

                      கிரீஸ் நாட்டில் நடந்து முடிந்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தப் போட்டிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டதை சன் தொலைக்காட்சி உள்ளிட்டவை ஒளிபரப்பியதை நீங்கள் அறிவீர்கள்.

       அப்போட்டியில் கலந்துகொண்டது குறித்து மாரிமுத்துவிடம் விரல்மொழியர் பேட்டி கண்டது.

பேட்டி கண்டவர் பாலகிருஷ்ணன் மருதமுத்து.

 

பாலகிருஷ்ணன் மருதமுத்து: வணக்கம் மாரிமுத்து. முதலில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டதற்கு விரல்மொழியர் சார்பாக வாழ்த்துகள். முதலில் உங்களைப் பற்றி ஒரு அறிமுகம் வாசகர்களுக்குச் சொல்லிடுங்க.

 

மாரிமுத்து: என் பெயர் மாரிமுத்து. அம்மா சுப்புலெச்சுமி, எங்களது சிறு குடும்பம். நான், அம்மா, எனது தம்பி விக்னேஸ்வரன். 8ஆம் வகுப்புவரை SHVN பள்ளியில் படித்தேன். 9ஆம் வகுப்பு முதல் எனக்குப் பார்வைகுறைய தொடங்கியதும் பாளையங்கோட்டையில் பார்வையற்ற பள்ளியில் 12ஆம் வகுப்புவரை படித்தேன். தற்பொழுது லயோலா கல்லூரியில் இளங்கலை வரலாறு மூன்றாம் ஆண்டு படித்துவருகிறேன். எனது அம்மா ஒரு டாக்டர் வீட்டில் சமையல் வேலைசெய்து என்னையும் எனது தம்பியையும் வளர்த்து வர்றாங்க.

 

கே: எப்பொழுது முதல் சதுரங்கம் விளையாண்டு வரீங்க?

: எனது 6-ஆம் வகுப்புக் கோடை விடுமுறையின் பொழுது எங்கள் அம்மா வேலைபார்க்கும் இடத்தில் சதுரங்கம் விளையாடுவார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடுவோம் நானும் எனது தம்பியும். எனது உடற்கல்வி ஆசிரியர் தான் சதுரங்க போட்டிகளை அறிமுகம் செய்தார். நான் பாளையங்கோட்டையில் படிக்கும் பொழுது பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசு வென்றதன் மூலம்தான் எனது பெயர் வெளியில் தெரிந்தது.

 

கே: ! அப்படியா! அப்புறம் எப்படி உங்களுக்குப் பார்வையற்றவர்களுக்குத் தனியே சதுரங்க போட்டி நடக்கும் என்று தெரியும்?

: அருப்புக்கோட்டையில் பார்வையுள்ளவர்களுக்கான சதுரங்கப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டேன். அங்கு காலம் சென்ற திரு. முத்துராமன் சாரையும், தற்போதைய தமிழ்நாடு பிரெயிலி செஸ் அமைப்பின் நிர்வாகியான விக்னேஷ் அவர்களையும் சந்தித்தேன். அப்பொழுதுதான் அவர்கள் சொன்னார்கள். நமக்கான அடையாள அட்டை இருந்தால் போதும் அச்சங்கத்தின் உறுப்பினராகி பார்வையற்றோர்களிடையிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்கலாமென்று.

 

கே: உங்களது சதுரங்கச் சாதனைகள் என்னென்ன?

: எனக்கு சதுரங்க ரேட்டிங் 1630 உள்ளது. மனிப்பாலில் நடந்த ஆசிய அளவிலான போட்டியில் 8ஆம் இடம் பெற்றேன். இந்திய D அணி கேப்டன். 2016ஆம் ஆண்டு நடந்த பள்ளி மாணவர்களிடையிலான தேசிய அளவிலான போட்டியில் முதலிடம். 2018ல் ஹைதராபாத்தில் நடந்த தேசிய அலவிலான போட்டியில் முதலிடம். அதே வருடம் வர்தாவில் நடந்த தேசியப் போட்டியில் முதலிடம். 2017ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் மூன்றாம் இடம். 2019ல் நடந்த தேசியப் போட்டியில் 2ஆம் இடம். பிறகு 2015, 2017, 2018, 2019, 2020 என 5 முறை மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம். கொரோனா காலத்தில் முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டி முதலிடம். அது குறித்துக்கூட விரல்மொழியரில் நீங்கள் எழுதியிருந்திங்களே!

 

கே: ஆம்! ஞாபகம் உள்ளது. நீங்கள் என்னமாதிரியான இடர்பாடுகளைச் சந்தித்திங்க?

: எல்லாப் பள்ளிகளிலும் உள்ளவாறே இருந்த கஷ்டம்தான் இருந்துச்சு. நான் 10ஆம் வகுப்பு இறுதி தேர்வின்போது ஆசிய போட்டி இருந்துச்சு. அதற்கும் நான் நல்லா தயாரானேன். இருப்பினும், பரிட்சையா விளையாட்டானு இருக்கும் போது என் அம்மா சொல்லிட்டாங்க உன் விருப்பம் போல செய்யுன்னு. என்னைப் பொறுத்தமட்டில் படிப்பில் 60 முதல் 70% மார்க் எடுத்தால் போதும். அதனால, நான் ஆசியப் போட்டியில் கலந்துகொள்வது என முடிவெடுத்து கலந்து கொண்டேன். போட்டிக்குப் பின்பு தனித் தேர்வின் போது எழுதி 80% மேல மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றேன். அப்புறம்,  2018ஆம் ஆண்டு நடந்த 5th தேசியளவிலான போட்டியில் கொஞ்சம் உளவியியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன். ஆனால், அதற்குப் பின்பு தான் நல்லா பண்ணனும் என்று நினைத்து இவ்வளவு தூரம் வந்துருக்கேன்.

 

கே: உங்களது பயிற்சியாளர் குறித்துச் சொல்லுங்க?

: எனது அம்மா வேலைபார்க்கும் இடத்துல டாக்டர் அவர்களுக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் திரு. அனந்தராமன் என்றால் எல்லோருக்கும் தெரியும். அவர் உலக அளவிலான சதுரங்க நடுவர். அவர்தான் எனக்குப் பயிற்சியளித்தார். அவர் அவ்வப்போது வெளிநாடு சென்றுவிடுவார். அப்பொழுது சில மெட்டீரியல் கொடுத்து எனக்கு உதவினார். மேலும், எனக்கு அப்போது நிறைய போட்டிகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டனங்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் உதவியிருக்கிறார். தற்பொழுது தமிழ்நாடு பிரையில் சங்கம் மற்றும் திருமதி. யசோதா மேடம் மூலம் திரு. விஸ்வேஸ்ரன் என்ற பயிற்சியாளர்தான் பயிற்சியளித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு AICFB நடத்திய பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடித்தேன். அப்பொழுது திரு. செல்வமணிகண்டன் சார் தான் எனது பயிற்சியாளர்.

 

கே: கிரீஸ் நாட்டில் நடந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டி குறித்துச் சொல்லுங்க? அதற்கு எவ்வாறு தேர்வுசெய்வார்கள்?

: முதலில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறனும், அதன்பின்பு தென்மண்டல அளவிலான போட்டி, பின்பு தேசியளவிலான போட்டி. இவை அனைத்திலேயும் வீரரின் திறனை வைத்துத் தேர்வுசெய்வாங்கஅதன்படி 10 பேர் இந்த முறை கலந்துகொண்டோம். அதில் தமிழகத்தில் நான் மட்டும் தேர்வானேன். ஒலிம்பியாடைப் பொறுத்தமட்டில் இம்முறை இந்தியா 8ஆம் இடம் வந்துருக்கிறோம். இப்போட்டி கிரீஸ் நாட்டில் நடந்தது. இதனை international blind chess association [IBCA] நடத்துனாங்க. இது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பல நாட்டினர் கலந்து கொண்டார்கள். இது ஒரு குழுப் போட்டி.

 

கே: இந்தப் போட்டியில் கலந்து கொண்ட உங்களது அனுபவங்களைப் பகிர்ந்துக்கோங்க மாரி.

: ! கண்டிப்பா! இது எனக்கு முதல் முறை வெளிநாடு சென்று கலந்துகொண்ட முதல் போட்டிரொம்ப வித்யாசமான அனுபவங்கள். நிறைய கற்றுக் கொண்டேன். அதேசமயம் முன்னாள் உலக சாம்பியனையும் வெற்றிபெற்றேன். அப்பறம் சூழ்நிலை கொஞ்சம் செட்டாகளை. உணவும் அப்படித்தான். தொடர்ந்து 6 மணிநேரம் உட்கார்ந்து விளையாடனும் என்பதால் ப்ரோட்டின் அதிகம் தேவை அதற்கு அசைவ உணவு எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. கடைசி ஒரு போட்டியில் மட்டும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. காரணம், எனக்கு உடல்நிலை சரியில்லை. அதுமட்டும்தான் மற்றபடி சிறப்பாக இருந்தது.

 

கே: அங்கு முழு பார்வையற்றவர்களின் சவால் என்னென்ன?

: நிறைய இருக்குது. முதலில் சதுரங்கத்திற்கு வைக்கப்படும் கடிகாரம் Chess Clock அவர்களுக்கு அணுகள் தன்மையுடன் இல்லை. 40 நகர்தலுக்கு பிறகு கூடுதல் நேரம் வழங்கப்படும். அப்படிருக்க நகர்த்தல்களைக் கணக்கிடுவதில் சிக்கல் இருந்துச்சு. குறைபார்வை உடையவர்களுக்கு இவ்வாறான சிக்கல் இல்லை. அவர்களே அந்த கிலாக்கில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அப்புறம், இது குழுப் போட்டி என்பதால் சகபோட்டியாளர்களின் வெற்றி தோல்வியைப்  பொருத்தே எதிராளி சமன் செய்ய கேட்கும் போது அதை ஒப்புக் கொள்ளச் சரியாக இருக்கும். அதைத் தெரிந்துகொள்ள வசதிகள் இல்லை.

 

கே: இதை அவர்கள் எவ்வாறு சமாலித்தார்கள்?

: சிலர் சிறிய சதுரங்க பலகை காய்ன்ஸ்களை ஒரு நகர்த்தளுக்கு ஒரு காய்னைப் பலகையில் நட்டுவிடுவார்கள். சிலர் நானையங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இம்முறைகள் கொஞ்சம் கடினம் தான். இன்னம் டெக்னாலஜி வளரனும்.

 

கே: நீங்கள் குறைபார்வை உடையவர் எனச் சொல்லியிருக்கீங்க. அங்கு கிரீஸ் நாட்டில் முழு பார்வையற்றவர்களுக்குத் தனியான வசதிகள் எவ்வாறு இருந்துச்சு?

: அப்படி எதுவும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில் போட்டியின் இறுதிச் சுற்றுகளுக்குப் பிறகுதான் சில வசதிகள் செய்தார்கள். தங்கள் அணியினரின் போட்டி முடிவுகளை முழு மற்றும் குறைபார்வையுடையவர்களுக்கும் பிரெயில் மற்றும் பெரிய எழுத்துகளில் அந்தந்த டேபிளில் ஒட்டியிருந்தாங்க . இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க செயல். இதை முன்னாடியே வச்சுருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனெனில் மற்றவர்களின் முடிவு குழுப் போட்டிகளில் ரொம்ப முக்கியம்.   அதைத் தெரியாமல் நம்ம குழுவிலும் கஷ்டப்பட்டாங்க. இதற்காகவே நான் எனது முடிவுகளைச் சத்தமாக அறிவித்தேன். இதைப் பார்த்த எதிராலிகள் நான் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் கத்துவதாக நினைத்திருப்பாங்க. ஆனால், எனக்கு மட்டும்தான் தெரியும் இது எங்கள் அணியில் உள்ள முழு பார்வையற்றவர்களுக்குக் கொடுத்த சிக்னல் என்று. அப்பறம் ஒரு சிறந்த செயல் ஒன்று செய்திருந்தாங்க. குழு தலைவராக பயிற்சியாளரையே போட்டிருந்தாங்க. இது எனக்குச் சிறந்த முடிவாக தென்பட்டது. விசா உள்ளிட்ட சில காரணங்களால் போட்டி தொடங்க ஒரு நாளுக்கு முன்புதான் போக முடிந்தது.

 

கே: சென்ற வருடம் நடந்த செஸ் ஒலிம்பியாட் குறித்துச் சொல்லுங்க மாரி?

: உலகெங்கிலுமிருந்து 63 நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இது அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்குமானது. இந்தியாவில் மொத்தம் 4 அணிகள் பங்கேற்றோம்அதில் D அணிக்கு நான் தலைமை தாங்கினேன். அந்தப் போட்டியில் இளையவயது அணித் தலைவர் நான்தான். அப்போட்டி எனது கேரியரில் ரொம்ப முக்கியமான போட்டி. இங்கும் முந்தைய உலக சாம்பியனை வெற்றிகொண்டிருந்தேன். ஒட்டுமொத்தமாகவே இந்தியா நல்லாவே முடிச்சுருந்தோம்.

 

கே: Chess Base India யூடுப் சேனலில் உங்களது பேட்டி வந்திருந்தது. அவர்களது உதவித் தொகையை நீங்கள் பெற்றிருந்திங்க. அந்தச் சேனலைப் பற்றியும், அவர்களை எவ்வாறு நீங்கள் தொடர்புகொண்டீர்கள் என்பது பற்றியும் சொல்லுங்கள்.

: செஸ்பேஸ் இந்தியா ஒரு சதுரங்கம் தொடர்பான இணையம். அவர்கள் நிறைய சதுரங்கப் போட்டிகளை நேரடியா ஒளிபரப்பிருக்காங்க. அதுபோல இந்தியாவில் சதுரங்கம் வளரவும் அவர்கள் பல விளையாட்டு வீரர்களுக்கும் உதவிவர்றாங்க. நான் அவர்களிடம் ஒரு அயல் நாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டிருந்தேன். அவர்கள் அதற்குப் பதிலாக அவர்கள் வழங்கிவரும் மாதாந்திர உதவித் தொகையான ரூ 68907-ஐ வழங்கினார்கள். அவர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு வரும் சந்தா தொகையை நன்றாக சதுரங்கம் விளையாடும் வீரர்களுக்கு வழங்குவார்கள். அத்தொகை எனக்குப் பெரிதும் உதவியது.

 

கே: உங்களது அடுத்த மூவ் என்ன?

: எனக்கு எதிர் வரும் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டி இருக்கு. கொரோனா காரணமாக தள்ளிப் போயிற்று. அதற்குத் தற்பொழுது நான் தயாராகிவருகிறேன். இது பிரான்சில் நடக்க போகுது எப்பொழுது என்பது இன்னம் முடிவாகவில்லை.

 

கே: நீங்கள் கிரீஸ் போயிட்டு வந்ததும் யாராவது அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொண்டார்களா?

: இதுவரை இல்லை. நான் சென்று வந்தது கல்லூரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். அதுவும் சென்றுவர OD கேட்பதற்காக. பின்பு வந்ததும் மின்னஞ்சல் செய்தேன். எங்க மாவட்ட MLA அவர்களிடம்  பேசலாம் எனச் சொல்லியிருக்காங்க. அவளவுதான். சன் தொலைக்காட்சியில் வந்த செய்தி கூட பயிற்சியாளர் திரு. அனந்தராமன் சார் செய்த ஏற்பாடு.

 

நான்: உன்மையிலேயே வருத்தம் தான்.

மாரி: விளையாட்டிற்கான இட ஒதுக்கீட்டில் நமக்கான வாய்ப்பு  வழங்கப்படவில்லை. விளையாட்டில் சாதிச்சவர்களுக்கு வேலைவாய்ப்பு மாதிரியான அங்கிகாரம் கிடைத்தால் இன்னும் நிறைய விளையாட்டு வீரர்கள் வெளியே வருவாங்க.

 

கே: உங்களது எதிர்காலத் திட்டம் என்ன மாரிமுத்து?

: தமிழ்நாட்டிலே நிறைய சதுரங்க வீரர்களை உருவாக்கணும். அதை முதலில் பள்ளிக்கூடங்களிலிருந்து துவங்கனும். அதுல சிக்கல் என்னவென்றால், இங்கே பெரும்பான்மை பள்ளிகளில் அனுமதி தரமாட்றங்க. பூவிருந்தவல்லி போன்ற பள்ளிகளில் மட்டும் அனுமதி தந்து இப்ப எனது நண்பர்களான கோபி, ஹரிகரன் உள்ளிட்டோர் பயிற்சிகொடுக்குறாங்க. சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் விக்னேஷ் அவர்கள் பயிற்சி வழங்கிவருகிறார். இன்னும் பிற பார்வையற்றோர் பள்ளியில் அனுமதி வழங்க யோசிக்கிறார்கள்.

 

கே: இதனைப் படித்துவிட்டு மற்ற பார்வையற்றோர் பள்ளிகள் தொடர்பு கொண்டால் உங்களால் பயிற்சியளிக்க முடியுமா?

: நிச்சயமாக! இதனைத் தான் எதிர்பார்க்கிறோம். அவ்வாறு விரும்புபவர்கள் தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

 

பாலகிருஷ்ணன்: உங்களது குறிக்கோள் நிறைவேரவும், உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற விரல்மொழியர் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகள்! மேலும் உங்களது இந்த நேரத்தை ஒதுக்கி எங்களுக்குப் பேட்டி கொடுத்ததற்கு நன்றி மாரிமுத்து.

மாரிமுத்து: என்னைப் போன்றவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு உள்ளிட்ட பலவற்றையும் ஆவனப்படுத்திவரும் விரல்மொழியர் மின்னிதழிற்கு நன்றி!

 

மாரிமுத்துவைத் தொடர்பு கொள்ள: chessmaari@gmail.com

செஸ் ஸ்பேஸ் இந்தியாவில் மாரிமுத்து குறித்து வந்த கட்டுரை:

https://www.chessbase.in/news/Marimuthu-gets-September-ChessBase-India-YouTube-fund

 

மாரிமுத்து குறித்து செஸ் ஸ்பேஸ் இந்தியா  யூடியுபில் வந்த வீடியோ:

https://youtu.be/-UNmVKFJg6E

 

விரல்மொழியரில் நான் எழுதிய கட்டுரையின் இனைப்பு:

https://www.viralmozhiyar.com/2020/09/chess.html

images credit to Chess Baseindia

 

தொடர்புக்கு: shamabala12921@gmail.comm

                                  

3 கருத்துகள்:

  1. பேட்டி அருமை. தொடர்புகொள்வதிலுள்ள இ"க்"கட்டை நீக்கிவிட்டால் நலம்.

    பதிலளிநீக்கு
  2. பேட்டி அருமை. அதேசமயம், தொடர்புகொள்வதிலுள்ள இ"க்"கட்டை நீக்கிவிட்டால் நலம்.

    பதிலளிநீக்கு