கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 10 - வினோத் சுப்பிரமணியன்

graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்

 

(குறிப்பு:

      எமது இந்தக் கருத்துக்களம் பகுதிகளில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் எழுத்தாளரின் கற்பனையே. அதே சமயம் பார்வையற்றவர்களின் அனுபவங்களும் அவர்களின் பெயர்களும் மட்டுமே உண்மையானவை. இவை இரண்டும் கலந்ததுதான் இந்தக் கருத்துக்களம் தொடர். சர்ச்சைக்குரிய தலைப்புகளிலும் அனுபவங்களிலும் பார்வையற்றவர்களின் பெயர்கள் இருக்காது. பார்வையற்றவர்களின் வாழ்வில் நடந்த உண்மையான அனுபவங்களைச் சில பார்வையுள்ள கற்பனையான கதாப்பாத்திரங்கள் மூலமாக இவ்வுலகத்திற்குக் கொண்டுபோய் சேர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் முயற்சி. என்றாவது ஒருநாள் பார்வையற்றவர்களைப் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுவிடும் என்ற பேராசையின் பிரதிபலிப்பே இந்தக் கருத்துக்களம் தொடர்.

      இதற்கு முந்தைய பதிவுகளில் இந்த குறிப்பு தேவைப்படவில்லை என்றாலும் இந்த பதிவுக்கு தேவைப்படும் என்று தோன்றியதாலேயே குறிப்பிட வேண்டியதாய் போயிற்று).

                                                                                            ------------

      அது ஒரு சனிக்கிழமை இரவு. நேரம் 11 இருக்கும். அலுவலகம் சென்று வீடு திரும்பியபோது நம்பியின் வீட்டுக்கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அது அவன் எதிர்பார்த்ததுதான். அதனால் புதிய பூட்டுச் சாவியைக் கையோடு வாங்கி வந்திருந்தான். அதை மேசையின்மீது வைத்துவிட்டு வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்தபோது அனைத்தும் சிதரிக்கிடந்திருந்தது. அதுவும் அவன் எதிர்பார்த்ததுதான். கோப்புகள் கலைக்கப்பட்டிருந்தன. அதுவும் அவன் எதிர்பார்த்ததுதான். வந்தவர்கள் திருட வரவில்லை. தேடி வந்திருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியும். ஏற்கனவே இரவு உணவை வெளியில் முடித்திருந்ததால் சமயல் அறையின் பக்கம் போக தேவை இருந்திருக்கவில்லை. கழிவறை சென்று முகம் கழுவி ஆடை மாற்றி பின் சிதரிக்கிடந்தவற்றை ஓரளவு அடுக்கிவைத்துவிட்டு வாயிற்கதவை அடைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கட்டில்மீது சென்று விழுந்தான்.

      மணி நள்ளிரவு பண்ணிரண்டைக் கடந்தது. சமயல் அறையில் ஒரு சத்தம். அவன் எதிர்பார்த்ததுதான். புகையிலையின் நாற்றம் நாசியைத் தொட்டது. கையிலிருந்த அந்த சிறு கத்தியைத் தவறவிட்ட அந்த மர்ம மனிதன் மீண்டும் எடுத்தபடி சமயல் அறையைவிட்டு நிதானமாக வெளியே வந்து வீட்டின் மையப்பகுதியில் நின்றான். அதையும் எதிர்பார்த்துதான் இருந்தான் அறிவுடை நம்பி. மேசைமீது இருந்த மடிக்கணினியைத் திறந்தான் அந்த மர்ம மனிதன். பாஸ்வேர்டு இல்லை. ஆச்சர்யத்தில் வாய்ப்பிளந்தான். கையில் இருந்த கத்தி மீண்டும் கீழே விழுந்தது. மீண்டும் சத்தம். அன்று மதியம்தான்  அந்த மடிக்கணினியின் பாஸ்வேர்டை நீக்கி அனைவரும் இயக்கும்படி செய்திருந்தான் அறிவுடை நம்பி. கணினி திறந்தது. தேடல் தொடங்கியது. கணினியில் இருந்த அனைத்தும்  ஒரு பெண்டிரைவில் காப்பி செய்யப்பட்டது. அதை தன் பாக்கெட்டில்  வைத்தபடி நம்பியை நோக்கி நடந்தான் அந்த மர்ம மனிதன். நம்பியின் அருகில் வந்தவன் சட்டென்று பின் வாங்கி மீண்டும் கணினி அருகில் சென்று அந்த சிறு கத்தியை கையில் எடுத்துக்கொண்டு கணினியை அனைத்து மூடி மீண்டும் நம்பியை நோக்கி நடந்தான். நம்பியின் தலைக்கு அருகில் இருந்த அலைப்பேசியை எடுத்தான். அந்த செயலின்போது அந்த கத்தி நம்பியின் கழுத்திற்கு மேலே பயணம் செய்து கொண்டிருந்தது. நம்பி அசையவில்லை. அலைப்பேசியை எடுத்த அந்த மர்ம மனிதன் அதை திறக்க எண்ணினான்.

பாஸ்வேர்ட் பிரோடேக்டெட் . (PASSWORD PROTECTED)

பிங்கர் பிரிண்ட் ஆத்தரைசேஷன். (FINGERPRINT AUTHORIZATION)

    ஒரு நிமிடம் யோசித்த அந்த மர்ம மனிதன் நம்பியின் வலது கையை மெதுவாய் மேலே தூக்கி ஆட்காட்டி விரலை அலைப்பேசியின் சென்சாரில் வைத்தான். மொபைல் திறக்கவில்லை. ஒவ்வொரு விரலாக முயன்றான். பயனில்லை. நம்பியின் வலது கையை அப்படியே விட்டுவிட்டு இடது கையைத் தூக்கினான். நம்பி மல்லாக்க படுத்திருந்ததால் சிரமமின்றி காரியங்கள் நடந்துகொண்டிருந்தன. ஆனாலும் பயனில்லை. குழப்பத்துடன் அலைப்பேசியைப் பார்த்தான். என்னதான் கத்தி வைத்திருந்தாலும் அவனுக்கு உடலோடு சேர்ந்து உள்ளங்கையும் வியர்த்தது. கத்தியைச் சட்டை பாக்கெட்டில் எளிதில் எடுக்கும்படி வைத்துவிட்டு கால்சட்டையிலிருந்த தனது கைக்குட்டையை எடுத்து உள்ளங்கையையும் முகத்தையும் துடைத்துக்கொண்டான். திடீரென்று யோசனை வந்தவனாய் நம்பியின் வலது கை ஆட்காட்டி விரலையும் லேசாக துடைத்தான். அப்போது நம்பியின் விரல்கள் வியர்த்திருந்ததை உணர்ந்தான். சென்சாரில் வைத்தான். அலைபேசி திறந்து அரையெங்கும் வெளிச்சம் பரவியது. நம்பியிடமிருந்து எந்த அசைவும் இல்லை. ஆனால் அந்த மர்ம மனிதந்தான் திடுக்கிட்டவனாய் கத்தியைத் தனது மேல் பாக்கெட்டிலிருந்து உருவிக்கொண்டான். உருவியவன் சற்றும் தாமதிக்காமல் பக்கத்து அறைக்கு விரைந்தான். அலைபேசியை அலசினான். அவன் தேடி வந்தது கிடைக்கவில்லையே என்று தெரிந்தும் நம்பியின் அலைப்பேசியில் இருந்ததை எல்லாம் தனது பெண்டிரைவில் ஏற்றிக்கொண்டான்.

      மெதுவாக எழுந்து நம்பியின் அருகே சென்று அலைப்பேசியை அவனது தலையின் அருகே வைத்துவிட்டு விரைவாக வாயிற்கதவைத்  திறந்து கொண்டு வெளியே நடந்தான்.  அவ்வளவு நடந்தும் நம்பியிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததே அந்த மர்ம மனிதனுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

      அதே சமயம் அதுவரை படுத்துக்கொண்டிருந்த நம்பி எழுந்து வெளியே வந்து தனது வாயிற்கதவை அடைத்துவிட்டு மீண்டும் கட்டிலை நோக்கிச் சென்றான். மெத்தையிலிருந்த அவனது அலைப்பேசியை எடுத்தான். அங்கு அந்த மர்ம மனிதனின் கைக்குட்டையும் இருந்தது. ஜன்னலைத் திறந்து அந்தக் கைக்குட்டையை வெளியே வீசினான். நம்பி அந்தக் கைக்குட்டையை வெளியே வீசவும், அந்த மர்ம மனிதன் அந்த வழியைக் கடக்கவும் சரியாக இருந்தது. ஆனால் அது அவன் கடந்து சென்ற இடத்தை நோக்கி ஒருநொடி தாமதமாக அவனது தலைக்குப் பின்னால் சென்று விழுந்தது. ஜன்னலை மூடாமல் போய் கட்டிலில் படுத்தான் நம்பி.

      அடுத்தநாள் நிதானமாக எழுந்து வீட்டுவேலைகளைச் செய்துவிட்டு தம்பியை அலைபேசியில் அழைத்தான்.

இங்க கொஞ்சம் பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு. பிரியா இருந்தா வரியா?”

நம்பியின் அந்தக் கேள்வியைக் கேட்ட அடுத்த பத்தாவது நிமிடம் வந்து சேர்ந்தான் ஆசைத் தம்பி.

என்ன டா பிராப்லம்?”

அதுதான் எனக்கும் தெரியலஎன்று சொல்லி முந்தைய நாள் இரவு நடந்ததை விளக்கினான் நம்பி.

புரியல. தெரியலங்கிர ஆனா எதிர்பார்த்தா மாதிரின்கிற? எத தேடி வந்தாங்க?

கட்டுரை.”

எது! கட்டுரையா!” என்று அதிர்ந்தான் தம்பி.

ஆமாம்.”

எதுக்கு?”

வெளியில வரக்கூடாதுங்கிறதுக்காக.”

என்னது!” என்று மீண்டும் அதிர்ந்தான் ஆசைத் தம்பி.

அதிர்ச்சியா இருக்குல்ல? அதேதான் எனக்கும். அதனாலதான் நீ என்ன பிரச்சினைன்னு கேட்டப்போ தெரியலனு சொன்னேன்.”

நீ எழுதுற கட்டுரை ல்லாமே பார்வை இல்லாதவங்களைப் பத்தினதுதான். நாமலே கூவி கூவிக் கொடுத்தாலும் யாரும் படிக்க போரதில்ல.  இதுல யாருக்கு என்ன பிரச்சினை வரப்போகுது நம்பி!”

அப்படி நெனச்சுதாண்டா நானும் இந்தக் கட்டுரையத் தொடங்குனேன் என்று சொல்லி நிறுத்தினான் நம்பி.

பார்வையில்லாதவங்க எதிர்ப்பு தெரிவிக்கவும், பிரச்சினை பண்ணவும் வாய்ப்பில்ல. எதுக்குனா அவங்க கிட்ட ஒப்பிணியன் வாங்கிட்டுதான் ஆர்டிக்கலையே  வெளியிடுறீங்க. அப்படினா வேற யாரு?”

தெரியாது.”

போலீசுக்குப் போயிடலாமா நம்பி?”

தேவையில்ல. போலிசே நம்மளத் தேடிவரும்னு நினைக்கிறேன். எதுக்குனா என்கிட்ட பேசுன அந்த பர்சனுக்கு சமூதாயத்துல கொஞ்சம் இன்ப்ளுயன்சிருக்குன்னு  நினைக்கிறேன். அதனாலதான் சொன்னேன்.”

அப்படி என்ன கட்டுரை அது?” என்று கேட்டபடி அலமாரியைத் தேடினான் தம்பி. நம்பி எப்போதும் வைக்கும் இடத்தில் அந்தக் கட்டுரை இல்லை. உடனே நம்பியின் மடிக்கணினியை திறந்தாண். எல்லாம் பார்மெத் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் அதிர்ந்தான் தம்பி.

என்னடா எல்லாம் டெலிட்டாகி சிஸ்டமே பார்மட் ஆகி இருக்கு? வந்தவன் எல்லாத்தையும் அழிச்சிட்டு போயிட்டானா!”

இல்ல. எடுத்தது மட்டும்தான் அவன். அழிச்சது நாந்தான்.”

அதை எடுக்கிறதுக்கு  முன்னாடி செய்திருக்கலாம்ல? சரி ஆனா இப்போ எதுக்கு எல்லாத்தையும் டெலித் பண்ணி பார்மட் பண்ணி வெச்சிருக்க?

சிஸ்டம் சுலோவா இருக்குனு பன்னேன்.”

ஆசைத் தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை.

அனேகமா இப்போ அந்த கட்டுரை உன்னைய மேரட்டுனவங்கிட்ட போய் சேர்ந்திருக்குமில்ல?” என்றான் தம்பி.

இல்ல. வாய்ப்பில்ல. அதக் கண்டுபிடிக்குறது கொஞ்சம் கஷ்டம்தான்.” என்று சொல்லியபடியே எழுந்த நம்பி,

சரி வா. கிளம்பு போகலாம்.”

எங்க?”

பார்க்குக்கு.”

எதுக்கு நம்பி?”

கட்டுரையைப் பத்தி விவாதிக்க.”

அதுதான் உன்கிட்ட இல்லையே! இல்லாத கட்டுரையைப் பத்தி எதுக்கு டிஸ்கஷன்?”

என்கிட்டதான் இல்ல. ஆனா இருக்கு.”

எங்க?”

அவ கிட்ட இருக்கு.”

அவன்நா!”

அவங்கதான்.” என்று சொல்லியபடியே தம்பியை வெளியே அழைத்துக்கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கினான் நம்பி.

-------------

      பூங்காவில் நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தது. புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டிருந்தது.  எப்போதும் நம்பியிடம் வாதம் செய்து வம்பிழுக்கும் அந்தப் பெண் காகிதங்களுடன் மேடையின்மீது நின்று கொண்டிருந்தாள்.

      சரியான நேரத்திற்குத் தான் வரவில்லை என்றால் இந்தக் கட்டுரையை எல்லோர் முன்பும் சமர்ப்பித்துவிட வேண்டும் என்று இந்தப் பெண்ணிடம் சொல்லி இருந்தான் நம்பி.

 நம்பி வரவில்லை.

அய்யோ வந்திடுவான்னு தைரியமா இருந்தேனே. இப்படி நம்மள பேப்பர் பிரசண்டேஷன் பண்ண வெச்சிட்டானே இந்த ஆளு. அடே அறிவுகெட்ட  நம்பி எங்கடா இருக்க?”

----------

      தனது தெருவைத் தாண்டி மெயின்ரோட்டை அடைந்திருந்தான் அறிவுடை நம்பி. ஆசைத் தம்பி பின்னால் அமர்ந்திருந்தான். நம்பிக்கு ஆபத்திருக்கிறது என்ற அச்சத்தினாலேயே தனது பைக்கை நம்பியின் வீட்டிலேயே விட்டுவிட்டு நம்பியின் பைக்கில் உடன் செல்ல முடிவெடுத்தான். நம்பி எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை ஆசைத் தம்பி. பின்னால் அமர்ந்திருந்தபடி  தனது கண்களை நாளா புறமும் சுழலவிட்டுக்கொண்டிருந்தான்.

      நம்பி இருமுறை அழைத்தும் தம்பியிடமிருந்து மறுபேச்சு வரவில்லை.

----------

பேசுமா பேசு. சுத்தி சுத்தி பாத்துக்கிட்டு இருக்க? அந்த நம்பி தம்பி பேசும்போது மட்டும் கேள்வியா கேட்டுக்கிட்டு இருப்ப? பேப்பர கையில வெச்சிக்கிட்டு என்ன யோசன?” என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேள்வி கேட்க சட்டென்று பிரங்ஞை வந்தவள் போல் ஆனாள் அந்தப் பெண்.

அனைவருக்கும் வணக்கம். உங்களது அபிமான அறிவுடை நம்பி வருவதற்குத் தாமதமானதால் அவரது அறிவுரைக்கிணங்க இந்தக் கட்டுரையை நானே அவரது சார்பாக உங்கள் முன் சமர்பிபிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் உங்கள்என்று அந்தப் பெண் சொல்லி தனது பெயரைச் சொல்லும்போது ஒளிவாங்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அவளது பெயர் வெளியில் கேட்காமல் போனது.

இப்போ பேசுங்க மேடம்என்றார் கீழ் இருந்த பொறியாளர்.

அந்தப் பெண்ணுக்குப் பதற்றம் அதிகமானதால் இம்முறை அவள் விட்ட இடமான தனது பெயரைக்கூட சொல்ல மறந்து நேரடியாக தலைப்புக்குச் சென்றாள்.

பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.” என்று தலைப்பைப் படித்து முடித்தாள் அந்தப் பெண்.

----------

போடு! நல்ல தலைப்பா இருக்கே நம்பி இது!” என்று பின்னால் இருந்தவாறு புகழ்ந்தான் தம்பி. சாலையில் வாகனங்கள் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தன. இருந்தும் நம்பி சொன்ன அவனது கட்டுரையின் தலைப்பு தம்பிக்குக் கேட்கத்தான் செய்தது.

இதுக்கா டா நம்மள அவங்க துரத்திட்டு வராங்க?” என்றான் ஆசைத்தம்பி.

துரத்திட்டு வராங்களா?” என்றான் நம்பி உணர்வின்றி.

ஆமாம். மூணு பைக் ஆறு பேரு.” என்று  சொன்ன தம்பி இந்த தலைப்பு யாருக்கோ பிடிக்கல. அதனாலதான் நம்மகிட்ட  பிரச்சன பண்ணுறாங்களா?என்று கேட்டான்.

என்கிட்டஎன்று சொன்ன நம்பி,பேசாம நீ இறங்கி போயிடு தம்பிஎன்றான் அக்கறையுடன்.

அது நடக்கப்போரதில்ல நம்பி. நீ மேல சொல்லு.”

நம்பியிடமிருந்து மௌனம்தான் வெளிவந்தது.

ஏதாச்சும் பேசு நம்பிஎன்றான் ஆசைத்தம்பி.

----------

      தனது பேச்சை மேடையில் நின்றபடி தொடங்கினாள் அந்தப் பெண்.

இந்த உலகில் எல்லோருக்கும் வாழ உரிமை உண்டு. அந்த உரிமை பார்வையற்றவர்களுக்கும் உண்டுஎன்றாள் கூட்டத்தைப் பார்த்து.

அவள் வெறும் கட்டுரையை படிக்கமட்டும் வரவில்லை. முடிந்த அளவுக்கு முன் தயாரிப்பு செய்து உணர்வுப்பூர்வமாக அதைச் சமர்ப்பிக்கத்தான் வந்திருக்கிறாள் என்று அந்தக் கூட்டத்திற்குப் புரிய ஆரம்பித்தது.

ஒரு பார்வையற்றவருக்கு இருக்கும் சவால்களில் முக்கியமானவைகளில் ஒன்றாக கருதப்படுவது பணியிடங்களில் சந்திக்கும் சவால்கள். பெரும்பாலானோருக்கு அது வெறும் சவால் மட்டுமல்ல. கசப்பான அனுபவமும் கூட. ஒரு பார்வையற்றவர் அதிகம் இகழப்படுவது அவரது பணியிடமாகத்தான் இருக்கமுடியும். அவற்றில் பல வெளியே சொல்ல முடியாதவை. உதாரணத்திற்கு ஒன்று. அரசு பணியில் சேரும் பெரும்பாலானவர்கள் ஒதுக்கீடு முறையில்தான் பனியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் பார்வையற்றவரைப் பார்த்தால் மட்டும் நீங்க கோட்டாவில்தானே வந்திருக்கீங்க என்று வெளிப்படையாகவே கேட்பார்களாம். ஒரு பார்வையற்றவர் பணியிலிருக்கும்போது அவரால் என்ன முடியும், என்ன முடியாது என்று ஆராய்ந்து வேலை கொடுப்பது அந்த நிறுவனத்தின் தலையாய கடமை. ஆனால் அப்படி நடப்பதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள், குறிப்பாக அரசுத் துறைகள் அவர்கள் மீது காட்டுவது கருணை அல்லது காழ்ப்புணர்ச்சி. பார்வையில்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் பல பார்வையற்ற பணியாளர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவமாக இருக்கிறது.  

இங்கு பலபேருக்கு உங்களது சம்பளம் உங்களது வங்கிக் கணக்கில் போடப்படுகிறது இல்லையா? என்று கேட்டு கூட்டத்தை பார்த்தாள் அந்தப் பெண். அனைவரும் ஆம்என்ற வகையில் தலை அசைத்தனர்.

உங்களுக்கு தெரியுமா மக்களே! அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பார்வையற்றவருக்கு தனிக்கணக்குத் தொடங்கப்பட்டு அதில் சம்பளம் போட்டுக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. அவரது அம்மாவுடந்தான் அவருக்கு சம்பளக்  கணக்கு தொடங்கப்பட்டது. மிகுந்த போராட்டத்திற்கு பிறகுதான் அது மாற்றப்பட்டது. அதுவரை தனது சம்பளம் எவ்வளவு என்று கூட தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றார் அந்தப் பார்வைத்திறன் குறையுடைய பணியாளர்.”

எந்த டிப்பார்ட்மெண்டுன்னு சொல்லுங்க மேடம் காலி பண்ணிடலாம்!” என்று கத்தினான் கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபன். அதைக்கேட்டு சிரித்தாள் அந்தப் பெண்.

----------

எந்த டிப்பார்ட்மெண்ட் ஆளுடா உன்னைய மேரட்டுறது?” என்று கேட்டான் தம்பி நம்பியிடம். நம்பி வண்டியை மெதுவாக்கி பின்னால் திரும்பி அந்தப்பெண்ணைப்போலவே புன்னகைத்தான் தம்பியைப் பார்த்து. அப்போது அவனது கண்ணில் அந்த மூன்று பைக்குகளும் அதில் இருந்த அறுவரும் தெளிவாகத் தெரிந்தனர். சாலையில் வண்டியை வேகமாக இயக்கினான் நம்பி.

----------

      மேடையில் தனது பேச்சை அந்தச் சிறு புன்னகைக்குப் பின் தொடர்ந்தாள் அந்தப் பெண்.

தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்ற வார்த்தையெல்லாம் நாம் கொரோனா காலத்தில்தான் பழகிக்கொண்டோம். ஆனால் பார்வைத் திறன் குறையுடைய பணியாளர்களுக்கு இது பல கால பழக்கம். பெரும்பாலான பணி இடங்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அவர்களின் பகிர்தலின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று சொல்லி நிறுத்தினாள் அந்தப் பெண்.

தனியார் நிறுவனங்களைத் தற்சமயத்துக்கு விட்டுவிடுவோம். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அஞ்சல் துறை, ரயில்வே துறை, மாநிலப் போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, பொதுத்துறை வங்கிகள் எனப் பல்வேறு பணியிடங்களில் பெரும்பாலான பார்வையற்ற பணியாளர்களின் நிலை தனித்துவிடப்பட்ட நிலைதான்.   மற்ற துறைகளைக் கூட விட்டுவிடலாம். ஆசிரியர்களாக இருக்கும் பார்வையற்ற பணியாளர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்புவீர்களா?

ஆனால் அதுதான் உண்மை.

கசப்பான உண்மை.

பள்ளியில் நடக்கும் விழாக்களிலிருந்து பண்டிகைக் கொண்டாட்டங்கள் வரை எதிலும் தன்னைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்றார் ஒரு பார்வையற்ற ஆசிரியர் மிக வருத்தத்துடன். விடைத்தாள் திருத்துதல், தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுதல் போன்றவை இன்றும் பார்வையற்ற ஆசிரியர்களால் இயலாத பணிகள்தான். ஆனால் அந்த இயலாமையைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக உங்களுக்கெல்லாம்  என்ன சார் ஜாலிதான் என்று  கிண்டல்தான் செய்வர் சக ஆசிரியர்கள் என்று வருந்துகிறார் இன்னொருவர். நீங்கள்தான் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவில்லையே! அதனால் அனைவருக்கும் உங்கள் செலவில் மதிய உணவு வாங்கிக் கொடுத்துவிடுங்கள் என்ற வார்த்தை மற்றொரு பார்வையற்ற ஆசிரியருக்குஎன்று சொல்லி நிறுத்தாமல் தொடர்ந்தாள்  அவள்.

பள்ளிகளில் இருக்கும் கணினிகளைத் தொடுவதற்கு பார்வையற்ற ஆசிரியர்களுக்கு அனுமதியே கிடையாது. திரை வாசிப்பாண்கள்  மூலம் அதை அவர்களால் இயக்கமுடியும் என்று சொன்னால்கூட பெரும்பாலானோர் நம்பத் தயாராக இருப்பதில்லை. எனது வகுப்பில் மாணவர்கள் எனக்கே தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்ததால் அடுத்த நாளிலிருந்து துணையுடன்தான் வரவேண்டும் என்றார் புதிதாய் வந்த தலைமை ஆசிரியர் என்பது ஒரு பார்வையற்ற ஆசிரியரின் அனுபவப் பகிர்வு. ஆனால் அது பின்னாளில் தனக்கு உதவியாக இருந்ததாகவும் அந்த ஓய்வு பெற்ற பார்வையற்ற ஆசிரியர் எம்மிடம் சொல்லத் தவறவில்லை. இந்தக் கட்டுரைக்கு கருத்துகளை வழங்கியவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். மாணவர்கள் மதிப்பதில்லை என்பதில் தொடங்கி, மற்ற ஆசிரியர்கள் மட்டம் தட்டுகிறார்கள் என்பதுவரை கால்வைக்கும் இடமெல்லாம் கசப்புதான் என்கிறார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்.  ஆனால் தொழில்நுட்பம் தங்களைக் காப்பாற்றிவிடுகிறது என்கிறார்கள் பலர். ஆனாலும், அதற்குக் கொடுக்கும் விலைதான் மிக அதிகம் என்பதுதான் எல்லோரும் தெரிவிக்கும் கருத்தாக உள்ளது. ‘நாங்கள் பணிபுரியும் கல்வி நிறுவனங்களில் எங்களை நாங்கள் நிரூபித்த பிறகுதான் கணினியே எங்களுக்குக் கிடைத்தது. அதற்காக நாங்கள் பட்ட சிரமமும், செலவு செய்த நேரமும் மிகவும் கசப்பானவை அன்றி வேறேதும் இல்லைஎன்கின்றனர் அவர்கள்.”

கல்வித்துறையாவது கால் கிணறு தாண்டி இருக்கிறது என்று ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். பார்வையற்றவர்கள் பணிபுரியும் மற்ற துறைகள் எல்லாம் இன்னும் மண்ணில்தான் மயங்கிக்கிடக்கிறது என்பதுதான் எதார்த்தம்.

மேலே குறிப்பிட்டபடிதான் பார்வையற்றவர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதுதான் அனைத்துத்துறைகளிலும் பின்பற்றும் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இங்கு எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. எல்லாம் அனுபவங்கள்தான். பணியில் இருக்கும் பார்வையற்றவர்களை அவமானப்படுத்துதல், அவநம்பிக்கையுடன் அகன்று செல்லுதல், அணுக முயற்சித்தால் அலட்சியம் காட்டுதல், அவர்களுக்கான பணியைக் கண்டறியாமல் இருத்தல், அப்படி அவர்கள் கண்டறிந்து சொன்னாலும் அதைக் கண்டும் காணாமல் இருத்தல் என்று எவ்வளவோ அஸ்திரங்கள் அநாயாசமாக துறை பாகுபாடின்றி பார்வையற்றவர்களின்மீது ஏவப்படுகிறது. ”

நான் எட்டு வருஷமா சும்மாதான் இருக்கேன் என்று வெளிப்படையாகவே வருந்துகிறார் ஒரு துறையைச் சேர்ந்த பார்வைத்திறன் குறையுடைய பணியாளர். பார்வைக் குறைபாடு இருப்பதால் கட்டாயம் உதவியாளரை வைத்துக்கொள்ளவேண்டும் என்றார்களாம் ஒரு அலுவலகத்தில். வேலைக்குச் சம்மந்தமில்லாதவர்களை எல்லாம் உதவியாளர் என்ற பெயரில் பணியில் வைத்திருக்கிறார்கள் என்ற புகார் வெளியிலிருந்து வர, வைத்துக்கொள்ளச் சொன்னவர்களே விளக்கிக் கொள்ளச் சொல்லிக் கட்டாயப் படுத்திய கசப்பான அனுபவம் இன்னொரு பார்வையற்ற பணியாளருக்கு.

-----------

      இது போன்ற அனுபவம் சாலையில் பயணம் செய்துகொண்டிருக்கும் அறிவுடைநம்பிக்கு ஏற்பட்டதில்லை. இருப்பினும் எந்த ஒரு பதற்றத்தையும் வெளிக்காட்டாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். ஆனால் ஒன்று மட்டும் அவனுக்குப் புரியவில்லை.

அடே மாமா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லடா.” என்று கேட்டான் நம்பி வாகனத்தைப் பின்தொடர்ந்துவரும் வாகனத்தில் இருக்கும் ஒருவன் அந்தப் பைக்கை ஓட்டுபவனைப் பார்த்து.

என்ன புரியனும்டா உனக்கு?” என்றான் ஓட்டுபவன் கேட்டவனைப் பார்த்து.

நாம ஆறு பேரு மூணு பைக். அவனுங்க ரெண்டு பேருதான். நமக்கும் அவனுங்களுக்கும் நடுவுல அம்பது அடி கூட டிஸ்டன்ஸ் இருக்காது. சேஸ் பன்னோமா, பிளாக் பன்னோமா, அட்டாக் பன்னோமா, கட்டுரைய கலக்ட் பன்னோமா கெளம்புனோமா அப்படினு இல்லாம எதுக்கு பாலோ பண்ணிக்கிட்டே இருக்கோம்?”

      இதே சந்தேகம்தான் முன்னாள் சென்று கொண்டிருந்த நம்பிக்கும் இருந்தது.

பாலோ பண்ண சொல்லித்தான் ஆர்டர். பிடிக்க சொல்லி இல்ல.” என்று சொன்னவன் மற்ற இரு பைக்குகளையும் சைகை செய்து அருகில் அழைத்தான்.

சம்மந்தப்பட்டவங்க கிட்ட இருந்து  போன் வராம யாரும் அவங்களத் தொடக்கூடாது. கொஞ்சம் கேப் விட்டு பாலோ பண்ணிக்கிட்டே இருங்கஎன்று சொல்லி வண்டியை முறுக்கினான்.

அதே நேரத்தில் சந்தேகம் தீராதவனாய் முன்னே சென்று கொண்டிருந்தான் அறிவுடை நம்பி.

இப்போ ஆர்டிகளோட நிலைமை என்னணு தெரியலயே.” என்றான் ஆசைத் தம்பி.

அவங்க பிரசெண்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.” என்று சொல்லியபடி அவனது அலைபேசியை தம்பியின் கையில் கொடுத்தான் நம்பி.

-----------

அவள் மேடையில் பேசிக்கொண்டிருந்தாள்.

தங்களுக்கான உபகரணங்கள் கொடுக்கப்பட்டால் தங்களாலும் சிறப்பான முறையில் பணியாற்ற முடியும் என்று எத்தனையோ முறை தாங்கள் முறையிட்டும், அதற்கான சுற்றறிக்கைகள் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டும், அந்தச் சுற்றறிக்கைகள் வெறும் காகிதங்களாகவும் மின் படிவங்களாகவுமே இருக்கின்றனவே தவிர, அந்தந்தத் துறையின் தலைமையால் முழுதாக அவை நிறைவேற்றப்படவில்லை. மேலே இருப்பவர்களைக் கேட்டால் மெத்தனமாக இருக்கிறார்கள். கீழே இருப்பவர்கள் அதுதான் சம்பளம் வருதே சும்மா இருங்க என்று கீழ்த்தரமாக அறிவுறுத்துகிறார்கள். விளைவு, எங்கள் மீது வீசப்படும் வார்த்தைகளும்,   காட்டப்படும் சைகைகளும்  குறியீடுகளும்தான்  என்கிறார் பல இன்னல்களைச் சந்தித்த பார்வையற்ற பணியாளர் ஒருவர்.

அதுமட்டுமில்லாமல் இன்னும் சில கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர் பார்வைத் திறன் குறையுடைய பணியாளர்கள். உதாரணமாக விடுமுறை விண்ணப்பங்களைத் தாமதப்படுத்துதல், பதவி உயர்வுப் பணிகளுக்கு பதிலி எழுத்தர்களுக்கான அனுமதியை உரியவர்களிடமிருந்துப் பெற்றுத்தருகிறோம்  என்று சொல்லி கடைசி நேரத்தில் வேண்டுமென்றே கைவிடுதல், இருக்கும் இடத்திலேயே எங்களைத்  தனிமைப்படுத்துதல், எங்களுக்கு உதவுபவர்களையும் எங்களை விட்டு அகன்று செல்லும்படி செய்தல், எங்களுக்கான பயணப்படிகளை வேண்டுமென்றே அப்ப்ரூவ் செய்யாமல் காலம் கடத்தி எங்களைக் கெஞ்சவிடுதல், எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுடன் உணவு உண்பதையே  பாவச் செயலாகக் கருதி ஒரு நவீனத் தீண்டாமையை நடைமுறையில் வைத்திருத்தல் எனச் சொல்லித் தீராதவை எங்களுடைய அனுபவங்கள்என்கிறார் இன்னொருவர் என்று பேசி ஒருநொடி நிறுத்தினாள்.

கூட்டத்தில் ஒருவித நிசப்தம் நிலவியது.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் பார்வைத் திறன் குறையுடைய பணியாளர்களுக்கான வாய்ப்புகளை மறுத்தல் மற்றும் அவர்களுடைய திறமைகளை நிராகரித்தல். இவை இரண்டும் ஒழுங்கு படுத்தப்படவேண்டும் என்பதுதான் அவர்களது நீண்டகால வேண்டுகோள். பணியிடங்களில் தங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கித் தந்தாலே அவர்கள் படும் அவமானத்திற்கும் பிறரின் ஏளன  பேச்சுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அவர்களுடைய சுயமரியாதை பாதுகாக்கப்படும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த சுயமரியாதையானது பார்வையற்றவர்களின் முதல் தேடலாகி போய்விடுகிறது. அது கிடைக்கும்வரை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள். ஆம் இன்னும் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள்என்றாள் கூட்டத்தை நோக்கி.

----------

எனக்குத் தெரிஞ்சு கிடைக்காதுனு நினைக்கிறேன் மேடம். அவனுடைய மொபைல், அப்புறம் லேப்டாப்ல இருந்து எடுத்த  எல்லா போல்டரையும் செக் பண்ணிட்டேன். அந்த ஆர்டிக்கல் எதிலுமே காணும் மேடம்என்றான் நேற்று நம்பியின் வீட்டுக்கு வந்து சென்ற அந்த மர்ம மனிதன் தனது அருகில் அமர்ந்தபடி கணினியைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியைப் பார்த்து.

அப்போ கிடைக்கல. காலைல இருந்து தேடிக்கிட்டே இருக்கீங்க. ஆனா கிடைக்கல! நீங்க எல்லாம் எதுக்குதான்... அப்புறம் ஏதாச்சும் வாயில வந்திடப் போகுதுஎன்று பொறிந்து தள்ளினார் அந்த 40 வயது நிரம்பி இருக்கும் பெண்மணி.

அட போங்க மேடம். பேரு கூட தெரியாம ஒரு கட்டுரையைத் தேடு தேடுன்னா நான் என்ன கொலம்பஸ்ஸா? கேட்டா பார்வையில்லாதவங்களைப் பத்தின கட்டுரைன்னு வேற சொல்லுறீங்க. இந்தக் கம்பியூட்டரையே பாத்துக்கிட்டிருந்தா எனக்குப் பார்வைப் போயிடும் போல இருக்கு. எதுக்கு தேடுறீங்க அப்படினு கொஞ்சம் விவரமா சொன்னா...”

அப்படியே கிழிச்சிறிவீங்க. இதுவரைக்கும் கிழிச்ச மாதிரி.”

கொஞ்சம் பாத்துப் பேசுங்க மேடம். நான் ஒன்னும் உங்களுக்குக் கீழ வேலை செய்யுர உங்க ஸ்டாப் கிடையாது. அவருடைய பிரெண்ட். நீங்க அவங்களுக்குதான் அதிகாரி. எனக்கு இல்லஎன்று கத்தி ஓய்ந்தான் அந்த கத்திக்காரன். 

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. எங்க ஆஃபிஸ்ல ஒரு பிளைண்ட் வொர்க்கர் இருக்காரு. சில நேரத்துல நான் கொஞ்சம் கடுமையா அவர பேசிடுவேன். அதனால எப்போவுமே எங்க ரெண்டு பேருக்கும் மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங் வரும். இப்படி இருக்கும்போதுதான் ஒருநாள் ஒருத்தரு இவர பாக்க வந்திருக்காரு. விசாரிச்சு பாத்தா அவரு இந்த பிளைண்ட் பெர்சன் கிட்ட இவருடைய வேலைல இருக்க கசப்பான அனுபவத்த அவருடைய கட்டுரைக்காக கேட்டுட்டு போனதா தெரிஞ்சிது. எனக்கு வேற அடுத்த வருஷம் பிரோமோஷன் கிடைக்கிறதா பேச்சு இருக்கு. அதுதான் தப்பா ஏதாச்சும் என்னைய பத்தி வந்திச்சுனா தேவை இல்லாம எனக்குப் பிரச்சினை வரும்னு அந்த நம்பியோட நம்பர கண்டுபிடிச்சு கட்டுரைய ஒருவாட்டி எனக்குக் காட்டிட்டு ரிலீஸ் பண்ண சொன்னேன். ஆனா அவன் என்னமோ பெரிய விகடன் ரைட்டர் மாதிரி இல்லாத பில்டப் எல்லாம் பண்ணான். முடியாது அப்படினு மூஞ்சிக்கு நேரா போன் லையே சொன்னான்

வீடியோ காலா மேடம்?”

அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் பேசும்போது குறுக்க பேசாதீங்கஎன்று சொன்ன அந்த அதிகாரி,

அதுதான் அந்த ஆர்டிக்கல எடுத்துட்டு வரசொல்லி உங்கள அனுப்புனேன். கூடவே எனக்குத் தெரிஞ்ச கொஞ்சம் பேரையும் அனுப்புனேன். ஒருத்தரும் ஒன்னுத்தையும் கிழிக்கல. இப்போ கடைசியா தெரிஞ்சவங்க மூலமா அடியாளுங்கள அனுப்பி பாலோ பண்ண சொல்லி இருக்கேன். ஆர்டிக்கல் கிடைச்சதுன்னா அவனுங்களுக்கு மேற்கொண்டு வேல கொடுக்கனுமா வேணாமானு முடிவு பண்ணிடலாம். அதுவரைக்கும் சுயமா எதுவும் பண்ண வேணாம்னு சொல்லியிருக்கேன். அதை மீறி ஏதாச்சும் நடந்துச்சுனா என் பேரு வெளிய வராம பாத்துக்க சொன்னேன். அவனுங்க என்ன பண்ணி தொலையப்போரானுங்களோ தெரியலஎன்று சொல்லி கணினி பக்கம் கண்களைத் திருப்பினார் அந்த பெண் அதிகாரி.

-----------

 

      அவர்களும் எதுவும் செய்யாமல் நம்பியைப் பின் தொடர்ந்தவண்ணம் போய்க்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது முன்பக்கக் கண்ணாடியில் பார்த்தவாறே முன்னே சென்று கொண்டிருந்தான் அறிவுடைநம்பி.

      அவனுக்கு இன்னும் கொஞ்ச தூரம்தான்  இருந்தது பூங்காவை அடைய. ஏதோ ஒரு காரணத்துக்காகதான் மிகவும் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தான் நம்பி.

இது அந்த போட்டோ காரருடைய நம்பர்தானே?என்று கேட்டான் தம்பி.

ஆமாம். நான்தான் அவர் வீடியோ எடுக்கும்போது எனக்கு லைவ் பண்ண சொன்னேன்.”

சரிடா! அதுதான் நாமலே போறோமே! அப்புறம் எதுக்கு அந்தப் பொண்ண பிரசெண்ட் பண்ண சொன்ன? முன்னாடியே போயி நீயே டெலிவர் பண்ணி இருக்கலாம்ல?” என்றான் தம்பி குழப்பத்துடன்.

இல்ல தம்பி. நாம போனா டெலிவர் பண்ண விடமாட்டாங்க. கரக்டா பிரசேண்டேஷன் முடியும்போதுதான் போய் சேரனும்.” என்று சொல்லியபடி அலைபேசியைப் பார்த்தான் அறிவுடைநம்பி. அவள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

-----------

 

தங்களுக்கான பணியைக் கண்டறியவே இல்லை தங்களது துறை என்று ஒரு சாரார் சொல்ல, இன்னொரு பிரிவினர் வேறுமாதிரியான கசப்பான அனுபவங்களைப் பகிர்கிறார்கள். அதாவது தங்களுக்குத் தங்களின் சக்திக்கு மீறிய வேலையைக் கொடுத்துவிட்டு அதைச் செய்யச் சொல்கிறார்கள். அது எங்களுக்கு உள்ளபடியே மகிழ்ச்சிதான். ஆனால் யார் எந்த வேலையில் குறை வைத்தாலும், அதை முடிக்காமல் விட்டாலும் எங்களது மேலதிகாரிகள் கேட்கும்போது பார்வையற்ற பணியாளர்களை வைத்துக்கொண்டு முழுமையாக முடிக்கமுடியவில்லை என்று யாரோ தேக்கிவைக்கும் பணிகளுக்கெல்லாம் எங்கள் பார்வையின்மையைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்கிறார்கள். உண்மையிலேயே எங்களுக்கான பணியை நாங்கள் முடித்துதான் இருப்போம். ஆனாலும் எங்களுக்கு அவப்பெயர் வரும்படியே தமது உயர் அதிகாரிகளிடம் காரணம் சொல்வார்கள் என்கிறார்கள் வருத்தத்துடன்.

கொரோனா காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது; அதில் நாங்களும் அடக்கம். ஆனால் உடன் பணிபுரியும் பணியாளர்கள் அதை மிகவும் மோசமான முறையில் விமர்சித்தார்கள். வீட்டிலேயே அமர்ந்து வெட்டிச் சம்பளம் வாங்குகிறார்கள் என்றும், கொரோனாவுக்கும் கண்ணு தெரியாதவங்களுக்கும் என்ன சம்மந்தம்? எல்லாருக்கும் வரதுதானே அவங்களுக்கு மட்டும் விதிவிலக்கா? நாங்க எல்லாம் அலுவலகம் வரல? என்றெல்லாம் பேசினார்கள் என்று பகிரும் பார்வையற்ற பெண் பணியாளர் ஒருவர்,ர்ப்பிணிகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கை ஏற்றுக்கொண்டவர்கள் கண்பார்வையற்றவர்களுக்கு என்றால் மட்டும் கடுமையாக பேசியது ஆச்சர்யமாகவும் கசப்பான அனுபவமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்என்று படித்தவள் கண்களைக் காகிதத்தில் இருந்து விளக்கி அங்கிருந்த மக்களை நோக்கி

உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்என்று சொல்லி ஒருநொடி நிறுத்தினாள். அவளது கோரிக்கையை ஏற்கும் வண்ணம் அனைவரும் அவளின்மீது தம் பார்வையைக் குவித்தனர்.

இந்தக் கொரோனா காலகட்டத்தில், அதுவும் இரண்டாம் லையில் எத்தனையோ பார்வைத்திறன் குறையுடைய பணியாளர்கள் சுய விருப்பத்துடனும் அல்லது நிர்பந்தத்துடனும் பணிக்குச் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுத் தன் உயிரை இழந்திருக்கின்றனர். அப்படி துரதிஷ்ட வசமாக இறந்துபோன  அந்தப் பார்வைத்திறன் குறையுடைய பணியாளர்களுக்கு உங்களால் முடியும் பட்சத்தில் ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்என்று சொல்லி ஒலிவாங்கியை அணைத்தாள்.

அனைவரும் எழுந்து நின்றனர். பூங்கா மௌனமானது.

-----------

அதே நேரத்தில் நம்பி வந்துகொண்டிருந்த சாலையில் சிவப்பு விழுந்ததால் சிக்னலில் நம்பியின் வாகனத்தோடு சேர்ந்து அனைத்து வண்டிகளும் அசைவின்றி நின்றுகொண்டிருந்தன.

-----------

எதுக்கு எழுந்துட்டீங்க?” என்று அந்த பெண் அதிகாரி சிறுகத்திக்காரனான அந்த மென்பொறியாளனைக் கேட்க,

கால் எல்லாம் வலிக்குது. ஒரு நிமிஷம் நின்னுக்கிறேன் இருங்கஎன்று சொன்னபடி அந்த அறையில் மௌனமாய் நின்றான்.

      அந்தப் பெண் அதிகாரி கணினியை வெறித்து நோக்கியபடி அமர்ந்துகொண்டிருந்தார்.

      மேடையிலிருந்தபடி அந்தப் பெண் தனது டிஜிட்டல் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சாலையில் இருந்தபடி சிக்னளைப் பார்த்துக்கொண்டிருந்தான் நம்பி.

51... 9...

52... 8...

53... 7...

சரி. அவனுடைய லேப்டாப்ள இருந்து எடுத்ததையெல்லாம்  முழுசாப் பாத்தாச்சு. போன் மெமரியில கொஞ்சம் பெண்டிங்க் இருக்குனு நினைக்கிறேன். அதையும் பாத்துடலாமே சார்?

54..  6...

55...  5...

56...  4...

இது என்னது ஒரு பொண்ணோட பெயர்ல ஒரு டாக்குமெண்ட்?”

57... 3...

ஓப்பன் பண்ணுங்க. என்ன அப்படியே நிக்கிறீங்க? சரி வேணாம். நானே பண்ணுறேன்.”

58... 2...

59... 1...

00....

பூங்காவில் அனைவரும் அமர்ந்தனர். கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்தாள் அவள்.

சாலையில் சிக்னல் நீங்கியதும் நம்பியின் வண்டி அதுவரை இல்லாத அளவிற்கு வேகமெடுத்து சீறிப்பாய்ந்தது. அவள் முடித்துவிடுவாள் என்பதை உணர்ந்ததால் வண்டியை முறுக்கினான் நம்பி.

டே! என்னடா இவன் திடீர்னு இவ்வளவு வேகமா பறக்கிறான்!” என்று பின்தொடர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள அவர்களின் பைக்குகளும் வேகமெடுத்தன.

அறையில் அந்தக் கணினியிலிருந்த கோப்பைத் திறந்தார் அந்த பெண் அதிகாரி.

கருத்துக்களம்: 10:   பார்வைத்திறன் குறையுடையவர்களுக்குப் பணியிடங்களில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் - அறிவுடைநம்பி என்ற தலைப்பைப் படித்து முடித்தார் அந்த அதிகாரி.

ஆனா எதுக்கு ஒரு பொண்ணோட நேம்ல சேவ் பண்ணி வெச்சிருக்கான்என்று எண்ணியபடியே முழுக் கட்டுரையையும் படிக்க ஆரம்பித்தார்.

அப்பாடா! நம்ம பேரு எங்கேயும் மென்ஷன்  ஆகலஎன்று பெருமூச்சு விட்டபடி பின்னால் சாய்ந்தார்.

மேடம் இன்னொரு பேஜ் இருக்குஎன்றான் அந்த மென்பொறியாளன்.

மேடையிலிருந்தபடி அந்த பெண்ணும் அரையிலிருந்தபடி அந்த பெண் அதிகாரியும் வெவ்வேறு இடத்திலிருந்து அதைப் படிக்க ஆரம்பித்தனர். 

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது. யாரையும் காயப்படுத்தவும் கோபப்படுத்தவும் எழுதப்பட்டதல்ல இந்தக் கட்டுரை. இது ஒரு சமூகத்தின் வலி. அதை வெளிப்படுத்துதல் என்பது நமது கடமை.  பார்வைத்திறன் குறையுடையவர்களோடு பணிபுரியும் எல்லாரும் இப்படித்தான் என்று சொல்வதும் இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. சில நல்ல உள்ளம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதை பறைசாற்றும் வகையில் இன்னொரு கட்டுரை தயாராகி கொண்டிருக்கிறது. நன்றிஎன்று சொல்லி தனது பேச்சை முடித்து மேடையைவிட்டு கீழிறங்கினாள் அந்தப்பெண்.

இது ஒரு கட்டுரைனு இதை தேடி படிச்சு. அடச்சை. இதனால யாருக்கும் எந்தப் பயனும் இருக்கப்போரதில்ல. வெளிப்படையா ஒரு விஷயத்தைக் கூட துணிச்சலா சொல்லுறதுக்கு  துப்பு இல்லாத ஆர்டிக்கல். இதுக்குப் போய் இவ்வளவு மெனக்கெட்டு இருக்கேன் பாரு நானு. வேஸ்ட் ஆப் டைம். நாளைக்கு ஆபீசுக்கு வரட்டும் அந்த பிளைண்ட் ஸ்டாப். நாம செய்றதையே நாம கண்டிநியூ பண்ணலாம்என்று சொல்லியபடி கணினியை மூடினார் அந்த பெண் அதிகாரி.

            பூங்காவின் அருகே வண்டியை நிறுத்தினான் நம்பி. அவனை பின்தொடர்ந்தவர்களும் தத்தம் பைக்குகளை நிறுத்தி நம்பியை நோக்கி வேகமாக நடந்தனர்.

நில்லுங்கடா டேய்!” என்றான் அந்த கூட்டத்தின் தலைவன் முன்னே சென்றவர்களைப் பார்த்து.

அவனுங்கள எதுவும் பண்ண வேணாம்னு சொல்லிட்டாங்க. வாங்க போலாம்என்று அந்த தலைவன் சொல்ல அனைவரும் திரும்பிச் சென்றனர்.

அவர்கள் திரும்பிச் செல்வதைப் பார்த்தபடியே பூங்காவிற்குள் நுழைந்தனர் ஆசைத்தம்பியும் அறிவுடைநம்பியும்.

 

graphic கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன் அவர்களின் படம்
கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன்

(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).

slvinoth.blogspot.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com

 

1 கருத்து: