விடை கொடுங்கள் நண்பர்களே! - ரா. பாலகணேசன்



விரல்மொழியர் தனது  பயணத்தை முடித்துக்கொள்கிறது. ஐந்து ஆண்டுகள்; 35 மின்னிதழ்கள்; அரிதாக எப்போதேனும் யூடியூப்  நிகழ்ச்சிகள். இவற்றை விரல்மொழியர் முடித்துக்கொள்கிறது.

பல சோதனைகளைக் கடந்து, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்தனை காலமும் பயணித்திருக்கிறது விரல்மொழியர். இந்த இதழ் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்திருக்கிறது; பல திறமை வாய்ந்த படைப்பாளிகளை மெருகேற்றியிருக்கிறது; புதியவர்கள் பலரை படைப்பாளிகளாக அங்கீகரித்திருக்கிறது; பல சாதனையாளர்களை  அறிமுகப்படுத்தியிருக்கிறது; தொழில்நுட்பத்தின் உதவியோடு பல புதுமைகளை நிகழ்த்தியிருக்கிறது; தமிழ்ச் சூழலில் முதல்முறையாக ஒரு பிரம்மாண்டமான இணையவழி விழாவை நிகழ்த்தியது; எல்லாவற்றிற்கும் மேலாக, பார்வையுள்ளோரும் பார்வையற்றோர் குறித்து அறிந்துகொள்ள உதவும் ஒரு களமாக இயங்கியிருக்கிறது.

இதழின் இத்தகைய அரும்பெரும் முயற்சிகளுக்கெல்லாம் துணை நின்றவர்கள் எங்கள் படைப்பாளிகள், நலன் விரும்பி்கள், வாசகர்களாகிய நீங்கள். உங்கள் அனைவருடைய கரங்களையும் பற்றி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் நான்.

ஒரு செயல்பாட்டின் முடிவு என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான். ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் இறுதிக் காலம் என்ற ஒன்று நிச்சயம் உண்டு என்று நான் அறிவேன். ஆனாலும், அந்தச் செயல்பாட்டின் முடிவு, அதைவிடச் சிறந்த ஒன்றின் தொடக்கமாக இருக்கவேண்டும். ஆனால் இங்கு இது நிகழவில்லை என்கிற வருத்தம் எனக்குள் இருக்கத்தான் செய்கிறது. பார்வையற்றவர்களுக்கென தனியாக இன்னும் ஒரு மின்னிதழ் கூட வெளியாகவில்லை என்பது விரல்மொழியருக்கான வெற்றிடத்தை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

இருந்தபோதிலும், கடலுக்குள் சென்று பயனளித்தால் தானே கப்பலுக்குப் பெருமை. அதனால்தான் மிகவும் வருத்தத்தோடு இந்த முடிவை அறிவிக்கிறேன்; குழுவாக அறிவிக்கிறோம். விரல்மொழியர் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது. அது தன் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறது.

இதுவரையிலான விரல்மொழியரின் இதழ்களை www.viralmozhiyar.com தளத்தில் வாசகர்கள் படித்துப் பயன் பெறலாம். எங்கள் வழக்கமான யூடியூப் தளத்திலும் இதுவரை பதிவிடப்பட்ட காணொளிகளைத் தொடர்ந்து பார்க்கலாம். விரல்மொழியர் மின்னிதழ் வாட்ஸப் குழுவும், கிலப் ஹவுஸ் அரங்கமும் தொடர்ந்து இயங்கும். மின்னிதழ் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது.

இதழ் உயிர்த்தெழுவது அக்கறையுள்ள, நல்ல, அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்களின் கைகளில் மட்டுமே உள்ளது. அப்படி ஒரு குழு தொட்டு்விடும் தூரத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு குழு இதழைத் துயிலெழுப்பத் தயார் என்றால், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் நாங்கள் நிச்சயம் வழங்குவோம்.

அக்கறையுள்ள அனைவரிடமும் நன்றி கூறி விடை பெறுகிறோம். விடை கொடுங்கள் நண்பர்களே உங்கள் விரல்மொழியருக்கு.

5 கருத்துகள்:

  1. விரல் மொழியர் ஏற்படுத்திய தாக்கம் மிக முக்கியமானது. அதன் வழியே எழுத்துக்களை நண்பர்கள் வாசிக்க தர முடிந்த வரிசையில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். நாம் எழுதிய எழுத்து ஒரு வலைதளத்தில் வெளியிடப்படும் பொழுது அதை நாம் வாசிக்கும் பொழுது கிடைக்கக்கூடிய அந்த அனுபவத்திற்கு ஈடு இணை இல்லை அதை எனக்கு விரல் மொளியர் தந்து இருக்கிறது. எழுதி முடித்த நண்பர்களிடமிருந்து ஆக்கங்களை பெறுவதற்கு அவர்கள் எவ்வளவு மெனக்கெட்டு இருக்க வேண்டும் சில வேலைகளில் அந்த தொந்தரவை நானே கொடுத்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால் இந்த இதழ் தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொள்ளும் என்று நான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. இதன் பின்னால் இருந்து அனைத்து விதமான செயல்பாட்டிற்கும் கடுமையாக உழைத்து இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றிகளந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மனதார தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்புப் பள்ளியில் 12ஆம் வகுப்பை நிறைவு செய்துவிட்டு விடுதியில் இருந்து வெளியேறும் பொழுது ஏற்படுமே ஒரு உணர்வு அதுபோன்ற ஒன்றினை நான் இப்பொழுது இந்த இதழின் பயணத்தின் இறுதியில் உணர்கிறேன். தமிழகம் முழுமையிலும் இருந்து எழுத்து சார்ந்த திறமைகளை ஒருங்கிணைத்த இதன் பணி காலம் தோறும் நினைவு கூறப்படும். இது அடையாளப்படுத்தியதும் இதனால் அடையாளப்படுத்தப்பட்டதும் பராமரிப்புக்கு உரியது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. கண்பார்வை அற்றவர்களின் வாழ்வியல் கோணங்களை தன்னகத்தே கொண்ட கருத்துக்களஞ்சியமாய் இது இருக்கத்தான் போகிறது. இது பல கேள்விகளை நம் முன்னே எழுப்பி விட்டு தன் பயணத்தை நிறுத்தி இருக்கிறது என்று நான் சொல்லுவேன். அதில் முக்கியமான ஒரு வினாவாக நம்மிடையே தீர்க்கமான அதே வேலையில் காத்திரமான கருத்துக்கள்களை பேசக்கூடிய எழுத்தாக்கங்கள் வளராமல் இருக்கின்றனவே ஏன்? என்கிற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எழுப்பி அதற்கான விடை தேடுகிற முயற்சியில் ஈடுபட வேண்டும் அதுவே இந்த இதழுக்கு ஓரளவிற்கு நாம் செய்யக்கூடிய கைமாறாக இருக்கும். இதில் பணியாற்றிய ஆசிரியர் குழுவிற்கும் தொழில்நுட்ப குழுவிற்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  2. விரல் மொழியர் மின்னிதழ் படிப்பதற்கு எளிமையானதாக இருந்தது விரல் மொழியர் மினிதலின் மூலமாக பல புதிய நட்புக்கள் எனக்கு கிடைத்தது இது ஒரு புது முயற்சி ஆனால் உங்கள் முயற்சியை முடித்துக் கொள்வதாக கூறுவது தான் சற்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருப்பினும் இதுவரை நீங்கள் தந்த அனைத்து பதிவிற்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  3. விரலுக்கு நிரமுண்டு, திடமுண்டு, சுவை உண்டு, திறமுண்டு, குணமுண்டு, ஆனால் மொழி உண்டா?
    இந்த கேள்விக்கு இவர்களால் தான் விடை பகரவியலும்.
    ஐந்து ஆண்டுகள் அயராது உழைத்து, ஆழ்ந்த பொருளுரைக்கும் அரும்பெரும் கட்டுரைகளையும், நயம் சால் கவிதைகளையும் பதிவிட்டு, பார்வையற்றோரின் எழுத்தாற்றலை பாருக்குப் பறையறைந்து அறிவித்தவர்கள் இவர்கள்.
    மாமதுரையில் சங்கம் விளங்கியது என்பார்கள். அது வரலாற்றுக் கணிப்புதான். ஆனால், பட்டித்தொட்டியில் இருக்கும் பார்வையற்றவனையும், எழுத்தியல் களத்தில் ஒன்றிணைத்த இவர்களும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் என்று நான் சொன்னால் அதை மருக்க எவரால் இயலும்?
    இருப்பியலுக்கும் இயங்கியலுக்குமே வழி இல்லாத பார்வையற்றவர்களை இதழியல் களத்தில் ஒன்றினைத்து, விரலுக்கும் மொழி உண்டு என்று காட்ட விரல் மொழியர் என்ற இதழை தொடங்கி, அந்த அரும்பணியில் வெற்றி வாகை சூடிய இந்த மின்னிதழ் குழுவினரையும் அதன் பொறுப்பாளர்களையும் புகழ வார்த்தைகள் இல்லை.
    அடடா! ஐந்து ஆண்டுகளில் எத்தனைப் பதிவுகள், எவ்வளவு எழுத்தாளர்கள்? அத்தனை பேரும் பார்வையற்றவர்கள்! நினைக்க நினைக்க பெருமிதம் தோன்றுகிறது.
    கட்டுரைக்கு முடிவுரை வந்தால் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் வெற்றித் திருமகளைப் பற்றிக்கொண்டிருக்கும் இந்த இதழுக்கும் ஓர் முடிவுரையா?
    நம்ப முடியாத அதிர்ச்சிக்கு உள்ளாகிறேன். இந்த முடிவு முற்றுப் புள்ளிக்கு பதிலாகக் கேள்விக்குறியை உள்ளத்தில் தோற்றுவிக்கிறது.
    எனினும், இரவுக்குப் பின் தோன்றும் பகலைப்போல், அமைதிக்குப் பின் தோன்றும் அலையைப் போல், புணித வெள்ளிக்குப்பின் உயிர்த்தெழுந்த ஞாயிறுபோல், கோடைக்குப் பின் பொழியும் மாமழைபோல், உதிர்வுக்குப் பின் மலரும் நறுமலர்போல், மண்ணில் விழுந்தபின் முட்டி மேலெழும் விதையைப்போல்! இந்த விரல் மொழியரும் அருந்தமிழை வளர்க்க, விரைவில் உயிர்த்தெழும் என்பது நம் மனவேட்கை.
    நன்றி.
    வாழ்த்துகளுடன்
    முனைவர் சே. திவாகர்.

    பதிலளிநீக்கு
  4. விரல்மொழியர் மின்னிதழ் குழுவின் ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பார்வையற்றவர்களுக்காக பார்வையற்றோரால் 27.08.2018 ல் தொடங்கப்பட்ட முதல் மின்னிதழ் பார்வைத்திறன் குறையுடைய சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. புரட்சியை செய்திருக்கிறது வெற்றிநடையில் சென்றது பலருடைய வாழ்கைக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. மேலும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தால் பார்வைத்திறன் குறையுடைய சமுதாயம் தலைநிமிரும். எப்போதும் எந்த சூழலிலும் வழித்தடம் மாறாமல் சென்ற இந்த விரல்மொழியர் மின்னிதழ் மென்மேலும் தன்னுடைய பயணத்தை தொடர வேண்டும் பலருடைய வாழ்வில் இருளைப் போக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம். இவன் பாஸ்கர்

    பதிலளிநீக்கு