என் குட்டி ஆசிரியரின் ஆசிரியருக்கு - J. யோகேஷ்


 

ஆசிரியரைப் பின்பற்றி செல்லும் மாணவக் குழந்தைகளின் கார்டூன் படம்

அவரவர் தமது ஆசிரியர்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துகள் சொல்வதுதான் வழக்கமான நடைமுறை. அந்தவகையில் நான் என் ஆசிரியர்களுக்காக ஏற்கனவே ஒரு பதிவு எழுதி என் நன்றிக்கடனைச் செலுத்திவிட்டதால், இந்தமுறை ஒரு குழந்தையின் அப்பாவாக  அவளின் கற்றல் செயல்பாடுகளால் மகிழ்ந்து அதற்குக் காரணமான அவளின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக இந்தப் பதிவு.

நான் புனித வளனார் பள்ளியில் படித்த 1999-2007 காலகட்டத்தில் ஆசிரியர்தினம் தீபாவளியை விட மகிழ்ச்சியான ஒன்று. நம்மால் பார்க்கமுடியாத வாணவேடிக்கைகளையும், தனியாக வெடிக்கமுடியாமல் மற்றவர் துணையுடன் வெடிக்கப்படும் அனுகுண்டுகளையும் விட, முழுக்க மாணவர்களின் உழைப்பாலும், பங்களிப்பாலும் கொண்டாடப்பட்ட ஆசிரியர்தினங்கள் மட்டற்ற மகிழ்ச்சியையும் தன்நம்பிக்கையையும் அளித்தது.

ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்தே அவ்வாண்டு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு சீனியர்களால்  என்னென்ன கலைநிகழ்ச்சிகள் செய்யலாம். அதனை யார் தயாரிப்பது போன்ற திட்டமிடல்கள் துவங்கிவிடும். 15-ற்குமேல்  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டுப் பயிற்சிகள் துவங்கிவிடும்.  ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வாங்குவதற்காக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிதிப் பங்களிப்பைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். போதிய நிதி சேராத நிலையில் பள்ளி நிர்வாகமே மீதி பங்களிப்பை வழங்கிவிடும் என்பது வேறு விஷயம்.

ஆசிரியர்தின கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பள்ளி ஆண்டு விழாவிற்காய் எங்களுக்குக் கற்றுத்தரப்பட்டவைகளின் நகலாகவே இருந்தாலும், நிகழ்ச்சி முடியும் வரை பொறுமையாக கண்டுகளிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியால் பல இளம் திறமையாளர்கள் கண்டறியப்பட்டு பள்ளியில் நடைபெறும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்றவர்களுக்கு எப்படியென தெரியாது. என்னுடைய ஆர்வத்தையும் தன்நம்பிக்கையையும் வளர்த்ததில் இந்த ஆசிரியர்தினங்களுக்குப் பெரும் பங்குண்டு.

ஆசிரியர்கள் மீதான மதிப்பும் மரியாதையும் இருந்தாலும், அப்போதைய என் அறிவு முதிர்ச்சியில் ஆசிரியர் தினங்கள் வெறும் கொண்டாட்டமாகவும், முன்னாள் மாணவர்களான எங்களின் மூதாதையர்கள் விட்டுச் சென்றவைகளின் தொடர்ச்சியாகவும் மட்டுமே  புரிந்துகொள்ளமுடிந்தது. கால ஓட்டம்  என்  புரிதலைக் கொஞ்சம்  மேம்படுத்தினாலும் சமீபகாலமாக எனது  குட்டி ஆசிரியரால் கிடைக்கும் பேரனுபவம் ஆசிரியர்கள் குறித்தான புதிய திறப்புகளை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.

என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றையும் விடுத்து முழுக்க முழுக்க குழந்தை வளர்ப்பில் மட்டுமே நான்  தற்பொழுது கவனம் செலுத்தி வருவதால்,  தினமும் காலை குளிப்பாட்டுவதிலிருந்து, உடன்  விளையாடும்போது, சாப்பிடும்போது என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவள் புதிதாகக் கற்றுக்கொண்டவைகள் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்வது வாடிக்கையாகிவிட்டது.

எல்லாவற்றிலும் சுயச்சார்போடு இருக்கும் என் போன்ற பார்வையற்ற தம்பதிகளுக்குச்  சவாலான ஒரே விஷயம் குழந்தைகளின் ஆரம்பநிலை கற்றல். தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள், எண்கள் என அனைத்தையும் பள்ளிக்குச் செல்லும் முன்னரே  மனப்பாடம் செய்யவைத்துவிட்டாலும் எழுத வைப்பதென்பது மிகுந்த சவாலாகவே இருந்தது. எழுத்து சொல்லிக்கொடுப்பதற்காக கணினி கீபோட், கடைகளில் விற்கும் 3ற்கும் மேற்பட்ட ABCD செட்டுகள், ஃப்லாஷ் கார்ட், சார்ட் போர்ட் என வீடுமுழுக்க நிறைய வாங்கி போட்டாலும் எதுவும் பெரிதாக பலன் கொடுக்கவில்லை.

அவளுக்கு எழுதச் சொல்லிக்கொடுத்தது அவளின் LKG  ஆசிரியரான திருமதி. ஜான்சி. LKG முடிக்கும்போது ABCD கேபிட்டல், ஸ்மால் இரண்டையும் தெளிவாக எழுதும் அளவுக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டார்கள். இருந்தாலும் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் அந்தப் பள்ளியிலிருந்து எங்கள் ஊரிலுள்ள கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளிக்கு மாற்றினேன்.

UKG க்கு பிறகான அவளின் தினசரி மாற்றங்கள் என்னை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்தளவிற்கு ஒரு ஆசிரியரால் குழந்தைகள் மீது நேர்மறையான ஆளுமை செலுத்தமுடியுமா என வியப்பாக உள்ளது.

அவளின் இதுவரையான வரலாற்றில் ஃபோன் இல்லாமல் ஒரு வாய்கூட சாப்பிட்டது கிடையாது. ஒருவேளை டவர் இல்லாமல் போனால்கூட வலுக்கட்டாயமாக வாந்தி எடுத்துவிடுவாள். அப்படிப்பட்டவளே ஒரே ஒருமுறை அவளின் வகுப்பாசிரியரோடு ஃபோனில் பேசிய பிறகு முழுக்க மாறிவிட்டால். இப்போதெல்லாம் ஃபோனே கேட்பதில்லை.

'காலையில எழுந்திருச்ச உடனே பாத்ரூம் போகனும்னு எங்க மேம் சொல்லிருக்காங்க,  எல்லோருக்கும் குட்மார்னிங் சொல்லனும்னு எங்க  மேம் சொல்லிருக்காங்க' இந்த மாதிரியான நிறைய விஷயங்கள். எல்லாமே 'மேம் சொல்லிருக்காங்க, மேம் சொல்லிருக்காங்க'.  இப்படி  திரும்பத் திரும்ப என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பதோடு, அவை அனைத்தையும் செயல்முறைக்கும் கொண்டுவந்துவிட்டாள்.

அதேமாதிரி அவளுடைய கற்றல் தொடர்பான  செயல்பாடுகளும்  மகிழ்ச்சிகரமாகவே இருக்கின்றன. தினம் தினம் எதாவது ஒரு புதியவற்றைக் கற்றுக்கொண்டு வந்து சொல்கிறாள். அவளுடைய ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை தினம்தோறும்  கூடிக்கொண்டே செல்வதைக் கண்கூடாக பார்க்கமுடிகிறது.

ஆங்கில இலக்கியம் படித்த எனக்கே ஆங்கிலத்தில் எதாவது பேசும்போது  வெட்கப்படும் அளவிற்கு சில கரெக்ஷன்களைச் சொல்லி தினரடிக்கிறாள். இதற்குப் பின்னால் இருக்கிற அவளுடைய  ஆசிரியரின்  அந்த அசூர உழைப்பைக் கொண்டாட ஒரு ஆசிரியர்தினம் போதாது.

இது தவிர, குழந்தைத்தனமாக அவள் சொல்கிற பொய்களை அவளின் ஆசிரியருக்குப் ஃபோன் செய்தே கண்டுபிடிக்கவேண்டியுள்ளது. இதுமாதிரியான நேரங்களில், தான் எவ்வளவு களைப்பாக இருந்தாலும் சலிக்காமல் என் அழைப்பிற்குப் பதில் கொடுக்கிறார்கள்.

ஒரு  பெற்றோராக எவ்வளவுதான் நாம் சொல்லிக்கொடுத்தாலும், வகுப்பறைச் செயல்பாடுகளில் தான்  குழந்தைகளின்  கற்றல் முழுமையடையும். அந்தவிதத்தில் எனது குழந்தையின் கற்றலுக்கு முழுக்கக் காரணமான, அவளின் மொழியிலேயே சொல்வதானால் MRS. PERLIN அவர்களுக்கு இனிய ஆசிரியர்தின நல்வாழ்த்துகள்.

தொடர்புக்கு: romioyogesh@gmail.com